மதுரை விளாச்சேரியில் தயாராகும் மெகா விநாயகர் சிலைகள்!
திருப்பரங்குன்றம் : மதுரை விளாச்சேரியில் விநாயகர் சதுர்த்திக்காக மெகா சைஸ் களிமண் விநாயகர் சிலைகள் தயாராகின்றன. இங்கு வாழும் பல குடும்பங்கள், சீசனுக்கேற்ப களிமண், பேப்பர் கூழ் போன்றவற்றால் பல்வேறு சிலைகள், கொலு பொம்மைகளை தயாரிக்கின்றனர். விநாயகர் சதுர்த்திக்காக 3 அடி முதல் 15 அடி உயர திரிபுர கணபதி, மகா கணபதி, துவஜ கணபதி, பால கணபதி, சிம்மாசனம், லிங்க விநாயகர், அன்னம், ரிஷப விநாயகர் போன்ற சிலைகளை களிமண்ணால் தயாரிக்கின்றனர். இச்சிலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் ஊர்வலத்தில் இடம்பெறுகின்றன. சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பிச்சை கூறியதாவது: அரசு உதவியால் களிமண் தாராளமாக கிடைக்கிறது. இரண்டு அடி உயரம் வரை களிமண், ஆற்று மணல் மூலம் சிலைகள் தயாரிக்க முடியும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில்கொண்டு களிமண் சிலைகள் தயாரித்து, வாட்டர் கலர் அடிக்கிறோம். ஒரு சிலை தயாரிக்க 10 முதல் 15 நாட்கள் ஆகும் என்றார்.