உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை அருகே புதைந்து கிடந்த நகரம்!

சிவகங்கை அருகே புதைந்து கிடந்த நகரம்!

சென்னை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், மத்திய தொல்பொருள் துறையினர், அகழ்வாராய்ச்சி நடத்தினர்; அப்போது, சங்ககால சுடுமண் உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டது.பெங்களூரில் உள்ள, மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின், அகழ்வாராய்வுப் பிரிவு சார்பில், கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், மார்ச் மாதம் முதல் அகழ்வாராய்ச்சி நடக்கிறது. மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர், அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில், உதவி தொல்லியலாளர்கள் வீரராகவன், ராஜேஷ் ஆகியோர் அகழ்வாராய்ச்சியில் செய்து வருகின்றனர்.இந்த ஆராய்ச்சியின் போது, சுமார், 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான நகரம், அந்த பகுதியில் புதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தமிழரின் தொன்மை நகர நாகரிகத்துக்கான தடயங்களும், சான்றுகளும் பெருமளவில் கிடைத்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன், உறைகிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, தொல்லியல் அறிஞர் வெ.வேதாசலம் கூறியதாவது: குடிநீர் தேவைக்காகவும், வீட்டின் பிற பயன்பாடுகளுக்காகவும், உறைகிணறு தோண்டும் முறை, சங்கக் காலத்தில் இருந்தே இருக்கிறது. வைகை ஆற்றுப்படுகையில் இதுபோன்ற உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், திருப்புவனம் பகுதியில் கால்வாய் தோண்டும் போது, இதேபோன்ற உறைகிணறுகள் கண்டறியப்பட்டன.

பெரிய குளக்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் உறைகிணறுகள் அமைத்து தண்ணீர் எடுப்பது, தமிழரின் தொன்மையான வழக்கம். இதுபற்றிய சான்றுகள் அகழாய்வில் கிடைத்துள்ளன. சங்கக் கால இலக்கியமான பத்துப்பாட்டில், பட்டினப்பாலை என்ற நுாலில், பூம்புகார் நகரத்தின் ஒரு பகுதியில் உறைகிணறுகள் இருந்தது பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. பட்டினப் பாலை நுாலாசிரியர் உருத்திரங்கண்ணனார், உறை கிணற்று புறச்சேரி என, குறிப்பிட்டு உள்ளார்; அந்த சங்கக் காலத்தைச் சேர்ந்த உறைகிணறு தான், கீழடி அகழாய்விலும் கண்டறியப்பட்டு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !