சபரிமலை நடை அடைப்பு: ஓணத்துக்கு ஆக.26 திறப்பு!
சபரிமலை: ஆவணி மாத பூஜைகள் முடிந்து சபரிமலை நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. இனி ஓண பூஜைகளுக்காக வரும் 26ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. சபரிமலையில் கடந்த ஐந்து நாட்களாக ஆவணி மாத பூஜைகள் நடைபெற்றன. ஆவணி மாதம் கேரளாவில் மலையாள புத்தாண்டு என்பதால் பக்தர்கள் கூட்டம் எல்லா நாட்களிலும் அதிகமாக இருந்தது. தினசரி பூஜைகள் மற்றும் நெய்யபிஷேகத்துடன், களபாபிஷேகம், சகஸ்ரகலசம், படிபூஜை போன்ற பூஜைகளும் நடைபெற்றன. இந்த பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தலைமையில் நடைபெற்றது. நேற்று இரவு ஒன்பது மணிக்கு அத்தாழபூஜை முடிந்து இரவு பத்து மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட்டது.இனி திருவோண பூஜைகளுக்காக 26ம் தேதி மாலை 5.30-க்கு நடை திறக்கும். 27 முதல் நெய்யபிஷேகம் நடைபெறும். 28-ம் தேதி ஓண பூஜைகளும், ஓண விருந்தும் நடைபெறுகிறது. 30ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கும்.