பரிதாப நிலையில் பழமை வாய்ந்த கோவில்கள்!
உடுமலை: உடுமலை பகுதியில், அரசுக்கு வருவாய் அளித்தும், பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வரும் பழமையான கோவில்களை பராமரிக்க, இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அமராவதி ஆற்றுப்படுகை மற்றும் உப்பாறு ஆற்றுப்படுகையில், பழமையான கோவில்கள் அதிகளவு உள்ளன. இக்கோவில்களுக்கு, மன்னர்கள், பாளையக்காரர்களால், நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அவற்றின் பராமரிப்பிற்காக மானியமாக அளிக்கப்பட்டன. முக்கியத்துவமும், பழமையும், வாய்ந்த கோவில்கள் தற்போது, பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வருகின்றன.
கண்டியம்மன் கோவில்: உடுமலை சோமவாரப்பட்டியில் அமைந்துள்ள இந்த கோவில், இரு கருவறைகள்; ஒரே தெய்வம் என்ற சிறப்பு பெற்றதாகும். கோபுரம், முன்மண்டபம், நடன மண்டபம் என கோவில், உப்பாறு படுகையின் வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு காலகட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், கோவிலின் தற்போதைய நிலை பார்ப்பவர்களை வேதனையடைய செய்யும் நிலையில் உள்ளது. உபயதாரர் ஒருவரால், கோவில் சுவர்களுக்கு, வர்ணம் மட்டும் பூசப்பட்டுள்ளது. நடன மண்டபம் இடிந்து விழுந்து; முன்மண்டபமும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. முன்கோபுரத்தில், மக்கள் அமரும் தளம் உட்பட பல்வேறு இடங்கள் பரிதாப நிலையில் உள்ளன. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவிலுக்கு, 120 ஏக்கருக்கும் அதிகமாக மானிய நிலங்கள் உள்ளன. மூவர் கண்டியம்மன் என்ற பெயருடன், தேரோட்டம் என பல ஆன்மிக விசேஷங்கள் சிறப்பாக நடத்தப்பட்டன என அப்பகுதி மக்கள் கூறினர். கோவிலுக்கு தனியாக நந்தவனம் எனும் பூந்தோட்டம், அதற்கான கிணறு இருந்ததாகவும், அவற்றை தற்போது தேட வேண்டியுள்ளது என கிராம முதியோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கோவில் சுவர்களில் உப்பாறு படுகையின் வளத்தை காட்டும் வகையில், முதலை உட்பட விலங்குகள், மன்னர்களின் சிற்பங்கள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. தற்போது, அந்த சிற்பங்கள் சிதைந்து காணப்படுகின்றன. சோமவாரப்பட்டியில், பழமையான கோவிலின் பரிதாப நிலைக்கு இந்து அறநிலையத்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கோட்டமங்கலம் வரதராஜ பெருமாள் கோவில், வல்லக்கொண்டம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில், பெரியபட்டி பெருமாள் கோவில், குடிமங்கலம் சிவன் கோவில் என பல கோவில்கள் பராமரிப்பிற்கு காத்து கொண்டுள்ளன. இதில், பல கோவில்களுக்கு, சொந்தமான நிலங்கள், இந்து அறநிலையத்துறையால் ஏலம் விடப்பட்டு, கணிசமான தொகை, வருவாயாக கிடைத்து வருகிறது. இவ்வாறு, கிடைக்கும் வருவாய் அளவிற்கு கூட கோவில்களில் பராமரிப்பு மேற்கொள்ளப்படுவதில்லை என்பதே அனைத்து தரப்பினரின் வேதனையாக உள்ளது. உடுமலை பகுதிக்கு சிறப்பு சேர்க்கும் இத்தகைய கோவில்கள் குறித்து, ஆய்வு நடத்தி இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.