உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டலட்சுமி கோவிலுக்குள் கரப்பான் பூச்சிகள்!

அஷ்டலட்சுமி கோவிலுக்குள் கரப்பான் பூச்சிகள்!

பள்ளிக்கரணை: பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் உள்ள பயன்பாடு இல்லாத கழிப்பறை இடிக்கப்படாததால், அருகில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலில், கரப்பான் பூச்சிகள் தொல்லை அதிகரித்து உள்ளது.அடையாறு மண்டலம், 181வது வார்டு, பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலை ஒட்டி, கடற்கரை ஓரமாக, எட்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கழிப்பறை ஒன்று உள்ளது. பாழடைந்த அந்தக் கழிப்பறை அருகில், கடந்த, 2013ல், புதிய கழிப்பறை கட்டப்பட்டது. இந்த நிலையில், பயன்பாடற்ற பழைய கழிப்பறை இடிக்கப்படவில்லை. புதிய கழிப்பறையில் சிறுநீர் கழிக்க, மூன்று ரூபாய் வசூலிக்கப்படுவதால், கடற்கரைக்கு வருவோர், பழைய கழிப்பறையையே பயன்படுத்துகின்றனர்.இரவு நேரத்தில் அந்தக் கழிப்பறை, மது அருந்தும் இடமாக மாறிவிடுகிறது. கடற்கரைக்கு வருவோர், அங்கு பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவுக் கழிவுகள் போன்றவற்றை போட்டுவிட்டுச் செல்வதால், கரப்பான் பூச்சிகள் அதிகளவில் பெருகி உள்ளன. அவை, கழிப்பறை சுவரை ஒட்டியுள்ள, அஷ்டலட்சுமி கோவில் சுற்றுச்சுவர் வழியாக கோவிலுக்குள் புகுந்து விடுகின்றன. அவை, கோவிலுக்கு வரும் பக்தர்களை அருவருக்கச் செய்கின்றன. கோவில் கருவறை, அலுவலகம் ஆகியவற்றில், கரப்பான் பூச்சிகள் அதிகளவில் பெருகி உள்ளன.இதுகுறித்து, கோவில் நிர்வாகம் சார்பில் பலமுறை புகார் தெரிவித்தும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என, குற்றம் சாட்டப்படுகிறது. பயன்பாடின்றி உள்ள அந்த கழிப்பறையை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !