உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் வெள்ளத்தில் மாதா திருத்தேர் பவனி!

பக்தர்கள் வெள்ளத்தில் மாதா திருத்தேர் பவனி!

பெங்களூரு:சிவாஜி நகர் துாய ஆரோக்கிய அன்னை பிறப்பு பெருவிழாவை முன்னிட்டு, மாதா திருத்தேர், மக்கள் வெள்ளத்தில் பவனி வந்தது.சிவாஜி நகர் துாய ஆரோக்கிய அன்னை பிறப்பு பெருவிழா, கடந்த, 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல், செப்., 7ம் தேதி வரை, நவநாள் நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன. காலை, 5:30 மணியிலிருந்து, இரவு, 8:30 மணி வரை தமிழ், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில், சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டன. தினமும் மாலை, 5:30 மணிக்கு, கொடிமேடையில் மறையுரைகள், அன்னையின் நற்கருணை ஆசிர் நடைபெற்றது.பிறப்பு பெருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 4:30 முதல் மாலை, 5:00 மணி வரை, அரை மணி நேரத்துக்கு ஒருமுறை திருப்பலி நடத்தப்பட்டது. காலை, 8:00 மணிக்கு கன்னடத்திலும்; 9:00 மணிக்கு தமிழிலும், பெங்களூரு உயர்மறை மாவட்ட பேராயர் பெர்னார்ட் மோரஸ், சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார்.

மாதா திருத்தேர், மாலை, 5:30 மணியளவில், ஆலயத்திலிருந்து பக்தர்கள் வெள்ளத்தில் கிளம்பியது. இதில், முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ஜார்ஜ் உட்பட பலர் பங்கேற்றனர். பேராயர் பெர்னார்ட் மோரஸ், திருத்தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, தேர் பவனியை துவக்கி வைத்தார். தேர், முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து, மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இந்த திருத்தேர், 9 டன் எடை கொண்டதாக அமைக்கப்பட்டது. திருத்தேரை துவக்கி வைத்து, பேராயர் பெர்னார்ட் மோரஸ் கூறுகையில், “பெண் குழந்தைகளை அழிப்பது அதிகரித்து வருகிறது; இது தவறு. பெண் குழந்தைகளை போற்றி பாதுகாக்க வேண்டும்,” என்றார்.தேர் பவனியை முன்னிட்டு, சிவாஜி நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !