புதிய வடிவத்தில் விநாயகர் சிலைகள் ஏற்றுமதி துவக்கம்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வெளிமாநில வியாபாரிகள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். இந்தியா முழுவதும் ஆண்டு தோறும், செப்., மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்டமாக கொண்டாடபடுகிறது. சதுர்த்தி தினத்தன்று மக்கள், தங்களின் வசதிக்கேற்ப விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி கடல், ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி, வரும் 17ம் தேதி கொண்டாடப்படுவதால், கடந்த பிப்., மாதம் முதல் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் அருகே உள்ள அய்யன்கோவில்பட்டு, அய்யூர் அகரம், சித்திலிங்கமடம் ஆகிய பகுதிகளில் இயற்கையான முறையில் மரவள்ளிக்கிழங்கு மாவு மற்றும் பேப்பர் மூலம் ஒரு அடி முதல் 21 அடி உயரம் வரை சிலைகள் தயாரிக்கப் படுகிறது. இந்த சிலைகள் 2 ஆயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை, உயரத்திற்கு ஏற்ப விலை போகின்றன. இதில், வண்ணம் பூசப்பட்ட சி லைகள் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும், திருவண்ணாமலை, திருப்பூர், சென்னை மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. விழுப்புரம் அடுத்த அய்யங்கோவில்பட்டை சேர்ந்த தொழிலாளி அரிகிருஷ்ணன் என்பவர், இந்தாண்டு புதியதாக பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை செய்துள்ளார்.