திருப்பூர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீர்த்த கலச ஊர்வலம்!
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து அன்னையர் முன்னணி சார்பில், 108 தீர்த்த கலச ஊர்வலம், திருப்பூரில் நடைபெற்றது.
திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் அருகே, ஊர்வலத்தை, இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்ரமணியம் துவக்கி வைத்தார். பெண்கள், 108 தீர்த்த கலசங்கள், விநாயகர் சிலைகள், மாவிளக்கு, முளைப்பாரி, தீப ஜோதியை எடுத்துச் சென்றனர். குழந்தைகள், அம்மன், விநாயகர் வேடமணிந்து, பங்கேற்றனர். சிறுமியரின் கோலாட்டம், கும்மியாட்டம் நடைபெற்றது.
நரசிம்ம அவதாரத்தில், இரணியனை வதம் செய்வது போன்ற ரதம், பலரையும் ஈர்த்தது. கோட்டை மாரியம்மன் கோவிலில், ஊர்வலம் முடிந்தது. பின், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, ஸ்ரீசஹானா நாட்டியாலயா குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது.
இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கிஷோர் குமார், இந்து அன்னையர் முன்னணி பொது செயலாளர் நிர்மலா, ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர்
மரகதம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.