திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலங்கள்!
திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தியொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 18.9.15 விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. திண்டுக்கல்லில் இந்து தர்மசக்தி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.
இதில் 11 சிலைகள் கொண்டு வரப்பட்டன. திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட்டில் துவங்கிய ஊர்வலம், ஏ.எம்.சி., ரோடு, மெயின்ரோடு, வழியாக கோட்டை குளத்தை அடைந்தது. மாநில செயலாளர் மாணிக்கம் உட்பட பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். சரவணன் எஸ்.பி., டி.எஸ்.பி., வனிதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு ஒன்றிய பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி 54 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ஊர்வலத்தில் முன்னால் சென்ற வாகனங்கள் மற்றவர்களை காணாததால் திரும்பி வந்தனர். அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின் கண்ணாபட்டி வைகை ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன. முன்னதாக நடந்த கூட்டத்திற்கு மின்னல்கொடி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். ஏற்பாடுகளை பா.ஜ.,ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நகர தலைவர் மதுரைவீரன் செய்திருந்தனர்.
நிலக்கோட்டை: இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில், ஒன்றிய தலைவர் பரமேஸ்வரன், துணை தலைவர் ஹரிஹரபாண்டியன், பா.ஜ., நகர தலைவர் பட்டம் முன்னிலையில் ஊர்வலம் நடந்தது. மாநில இணை அமைப்பாளர் பொன்னையன் பேசினார். அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, சித்தரேவு, சின்னகவுண்டன்பட்டி, கதிர்நாயக்கன்பட்டி பகுதிகளில் இருந்தும் 11 சிலைகள் அய்யம்பாளையம் மருதா நதியில் கரைக்கப்பட்டன.
கன்னிவாடி: ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், ரெட்டியார்சத்திரம், போத்திநாயக்கன்பட்டி, கசவனம்பட்டி கிராமங்களில் 63 இடங்களில் சிலைகள் அமைத்து பூஜைகள் நடந்தது. வாணவேடிக்கை, மாணவர்களுக்கு பரிசளிப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலைக்கிராமங்கள் தவிர்த்த பிற இடங்களில் இருந்து 53 சிலைகள் கன்னிவாடிக்கு கொண்டு வரப்பட்டன. ரெட்டியார்சத்திரம் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராஜ்மோகன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். விநாயகர் சிலைகள் மச்சக்குளத்தில் கரைக்கப்பட்டன.
தருமத்துப்பட்டி: இங்கு செப். 17ல், மாலையில் விநாயகர் ஊர்வலம் துவக்க முயன்றனர். மாலையில் நடத்த போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால், ரோடு மறியல் செய்தனர். தடியடி நடத்திய போலீசார், பலரை விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. மீண்டும் விநாயகர் சிலை அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். புதிய விநாயகர் சிலை அமைக்கப்பட்டு, பூஜைகள் நடந்தது. போலீஸ் பாதுகாப்பு ஊர்வலம் நடத்தியபின் கோம்பை நீர்தேக்கத்தில் கரைத்தனர்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சுற்றுப்பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 54 சிலைகள் செக்போஸ்ட் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு ஊர்வலம் துவங்கியது. இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் ஜெகன், ஒன்றிய செயலாளர் சுந்தரேஷ்குமார், செயலாளர் ரகுபதி கலந்து கொண்டனர். விருப்பாட்சி தழையூத்தில் சிலைகள் கரைக்கப்பட்டது. டி. எஸ். பி., செல்வம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை பகுதியில் லந்தகோட்டையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், பங்களா மேடு சென்று குளத்தில் கரைக்கப்பட்டது. மேலும் எரியோடு, வைவேஸ்புரத்தில் இருந்தும் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் பங்கேற்றன. இந்து முன்னணி ஒன்றிய தலைவர் கணேசன், செயலாளர் ஆறுமுகம், தங்கபிரபு பங்கேற்றனர். டி.எஸ்.பி., மோகன்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.