பரமக்குடியில் விநாயகர் ஊர்வலம்!
பரமக்குடி: பரமக்குடியில் இந்து முன்னணி சார்பில் 22 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் 18.9.15-ல் நடந்தது. நகர் தலைவர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரத்தின சபாபதி, நகர் செயலாளர்கள் விக்கி, மாரி, சித்துபாலன் முன்னிலை வகித்தனர். சுபாஷ் சந்திரபோஸ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இதில் "ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை விளக்கும் விநாயகர் உட்பட 35 விநாயகர் சிலைகள் இடம் பெற்றன.
சவுராஷ்ட்ர பள்ளி அருகில் துவங்கிய ஊர்வலம் சின்னக்கடை, காந்திசிலை, ஐந்துமுனை, ஓட்டப்பாலம், ஆற்றுப்பாலம், பஜார் வழியாக சுந்தரராஜப் பெருமாள் கோயில் முன் வைகை ஆற்று படித்துறையை அடைந்தது. அங்கு அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டன. நகர் பொதுச்செயலாளர் குமரன் நன்றி கூறினார்.
சாயல்குடி: சாயல்குடியில் சுந்தர விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நடந்தது. சிவஞான பாண்டியன் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு பூஜைகள் செய்து, பஜனை பாடல் பாடினர். இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் பலர் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.
பிள்ளையார்குளத்தில் நடந்த சதுர்த்தி விழாவில் களிமண் விநாயகருக்கு பூஜைகள் செய்து, இரவில் மாணவர்கள் பஜனை பாடல் பாடினர். காலை 7 மணியளவில் சிலையை ஒரு சிறுவன் தலையில் சுமந்து சென்று கண்மாயில் கரைத்தனர். காணிக்கூரிலும் மாணவர்கள், பொது மக்கள் சதுர்த்தி விழா கொண்டாடினர்.
கடலாடியில் கண்ணண் கோயில் அருகே விநாயகர் சிலையை வைத்து வழிபட்டனர். 18.9.15 மாலை 4 மணியளவில் காமாட்சியம்மன் கோயில், முக்கிய தெருக்களில் வழியாக சிலையை ஊர்வலமாக எடுத்துச்சென்று, மீண்டும் அதே இடத்தில் வைத்தனர். ஆர்.எஸ்.எஸ்., ராஜசேகர், பா.ஜ., ஒன்றிய தலைவர் ராமசாமி, நகர் தலைவர் மும்மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.