உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே கல்லினாலான காசி சிவலிங்கம் பிரதிஷ்டை: பக்தர்கள் தரிசனம்!

ஒரே கல்லினாலான காசி சிவலிங்கம் பிரதிஷ்டை: பக்தர்கள் தரிசனம்!

ஓசூர்: கெலமங்கலம் அடுத்த, பேவநத்தம் மலை மீது, ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட, காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபி?ஷகம் நடத்தப்பட்டது. தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட, கெலமங்கலம் அடுத்த பேவநத்தம் அருகே உள்ள மலையில், சிவா நஞ்சுண்டேஸ்வரர் ஸ்வாமி கோவில் உள்ளது. கெலமங்கலம் சுற்று வட்டார பகுதி பக்தர்கள் மட்டுமின்றி, கர்நாடக மாநிலத்தில் இருந்தும் அதிகளவு பக்தர்கள் இங்கு வந்து, வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கின்றனர். கடந்த ஜூலை, 5ம் தேதி இரவு மலை மீது ஏறிய மர்ம நபர்கள், சிவலிங்கத்தை உடைத்து முட்புதருக்குள் வீசி சென்றனர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடைந்த சிவலிங்கத்தை மாற்ற பேவநத்தம் கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, காசியில் இருந்து ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட சிவலிங்கத்தை பேவநத்தம் பகுதி பக்தர்கள் வாங்கி வந்து மலை மீது பிரதிஷ்டை செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை கோபூஜை, சிறப்பு அபி?ஷகம் ஆகியவை செய்யப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை, 8 மணியில் இருந்து, 9 மணிக்குள், சிவாநந்தா சிவாச்சாரிய ஸ்வாமிகள், ஜங்கமமட்டா ஸ்ரீ உமாபதி ஸ்வாமிகள் ஆகியோர் முன்னிலையில், சிவா நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !