கழிவுநீரால்.. தேவிபட்டினத்தில் நிறமாறும் நவபாஷாண கடல்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் நவபாஷாணத்தை சுற்றிலும் கழிவுநீர் தேங்கியுள்ளதால் கடல் கருப்புநிறமாக மாறியுள்ளது. ராமன் சீதயை மீட்பதற்கு முன், தேவிபட்டினம் நவபாஷாணத்தை வழிப்பட்டு சென்றதால் வெற்றி கிடைத்ததாக கூறப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த நவபாஷாணத்திற்கு வந்து சென்றால் திருமண தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், ஆயுள், செல்வம், கல்வி போன்ற பலன்கள் கிடைப்பதாக கருதப்படுகிறது. மேலும் முன்னோர்களுக்கு தர்பணம், பில்லி, சூனியம் போன்றவற்றிற்கான பரிகார பூஜைகளும் நடக்கின்றன. இதனால் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாட்டு பக்தர்களும் வழிபட்டு செல்கின்றனர்.
ராமேஸ்வரம் வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தேவிபட்டினம் நவபாஷானத்துக்கு வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் பக்தர்கள் கடலில் இறங்கி நவபாஷாணத்திற்கு செல்ல வேண்டும். தற்போது நவபாஷானத்தை சுற்றிலும் நடைமேடையும், கடல்நீர் சென்றுவர துளைகள் உள்ளன. துளைகள் கழிவுகளால் அடைப்பட்டு விட்டன. இதனால் கழிவுகள் வெளியேறாமல் அப்படியே தேங்கியுள்ளன. துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதி அடைகின்றனர். பக்தர்கள் கூறியதாவது: நவபாஷாணத்தை சுற்றிலும் கழிவுநீராக இருப்பதால் குளிப்பதற்கு சிரமமாக உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் வெளியேறி கடல்நீர் உள்ளே வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.