நினைவு சின்னமாக மாறிப்போன ’படி’!
மடத்துக்குளம்: வரலாற்றில் அளவீடுகளின் அடிப்படையாகவும், சம்பள கணக்கீட்டின் முன்னோடியாகவும் இருந்த ’படிகள்’ தற்போது, வீடுகளிலு ள்ள மங்கலப்பொருட்களில் ஒன்றாகி நினைவுச்சின்னமாகியுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, வேட்டையாடிய இறைச்சிகளை துண்டுகளாகவும், கூறுகளாகவும் பங்கிட்டு பிரித்துக்கொண்டான் மனிதன். பின்பு வந்த ஆண்டுகளில், வேட்டைத்தொழிலுடன் கால்நடைகள் வளர் ப்பு போன்ற பல உபதொழில்களில் ஈடுபட்டான். இதன் மூலம் கிடைத்ததை, தனது தேவைக்கும் போக மீதமுள்ளதை பண்டமாற்று முறைகள் மூலம் விற்பனை செய்தான். இதில் எடையோ, அளவோ அளவிடப்படவில்லை. நாகரீகம் வளர்ந்து விவசாயம் செய்ய தொடங்கினான். புதியவாழ்க்கை முறைக்கு மாறிய மனிதன் திடப்பொருள், திரவப்பொருள், விளைபொருள், உலோக காசுகளுக்கு அளவீடுகளை உருவாக்கினான். இதன் மூலம் பொருட்களின் தரமும் அளவும் அறிந்து பயன்படுத்தப்பட்டன.
மன்னர்கள் ஆட்சியின் போது, இந்த அளவைகள் முழுவதுமாக நடைமுறைப்படுத்தினர். எண்ணலளவைகள் (ஆண்டுகள், பெயர்கள், கால்நடைகள், பொன், காசுகள், அணிகலன்கள் ஆகியவற்றை அளவீடு செய்வது), நிறுத்தலளவை (தானியங்கள், வெல்லம் போன்றவை அளவீடு செய்வது), நீ ட்டல்அளவை (கயிறு, துணி, ஆகியவற்றை அளவீடு செய்வது), நிலஅளவை (விளைநிலங்கள், தரிசுநிலங்கள், கோவில் நிலங்கள், வீட்டு மனைகள் ஆகியவை அளவீடு செய்வது), முகத்தல் அளவை, (பால்,நெய்,எண்ணைய், நெல் ஆகியவற்றை அளவீடு செய்ய பயன்படுவது) போன்ற பல அளவைகள் பயன்பாட்டில் இருந்தன. இதில் முக்கியமானதாகவும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைமுறையில் இருந்ததும் ’படிகள்’ தான். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, தானியங்கள், எண்ணெய்கள், படிகளில் தான் அளந்து விற்பனை செய்யப்பட்டன. அறுவடைக்கு பின், தொழிலாளர்களுக்கு கூலி வழங்கவும், கோவில்களுக்கும், நில உரிமையாளர்களுக்கு குத்தகை வழங்கவும் இந்த படிகள் பயன்படுத்தப்பட்டன. ’படி’ என்பதற்கு சம்பளம் என பொருள் உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, கூலியை (தானியங்கள்) ’படி’களில் வழங்கியதால், இந்த அர்த்தம் உருவானது. தற்போதும் ஊதியம் பெறுபவர்கள் சம்பளப்படி (சம்பளத்தொகை), பயணப்படி (பயணச்செலவுதொகை), வீட்டு வாடகைபடி (வீட்டுவாடகைக்கான தொகை), உபகாரபடி (உதவிதொகைஅல்லது உபகாரசம்பளதொகை) என்று படிகளில் தான் பெறுகின்றனர்.
இந்த படிகள் தான், இன்றைய சம்பளங்களின் அடிப்படை அளவுகோலாக இருந்தன. இவ்வளவு, சிறப்பு வாய்ந்த படிகள் ஒருபடி, அரைப்படி, கால்படி என்ற அளவுகளில் உருவாக்கப்பட்டன. இந்தபடி அளவுகள் தான் ஒரு கிலோ, அரைக்கிலோ, கால்கிலோ என மாறின. அரசர் மக்களுக்கு இலவசமாக வழங்கிய உணவு தானியங்களும், அரசுக்கு மக்கள் தானியங்கள் மூலம் செலுத்திய வரிகளும் படிகளில் தான் பரிமாறப்பட்டன. படிகள் திருமண நிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதோடு, மங்கலகரமான பொருளாக அனைத்து வீடுகளிலும் இன்றும் மதிக்கப்படுகிறது. இந்த ’படிகளை’ முன்னோர்கள் உருவாக்க, மரம் மற்றும் இரும்புத்தகடுகளை பயன்படுத்தினர். ஒரு ‘படி’ 5 1/2 இன்ச் உயரம், 4 இன்ச் அகலம், 12 இன்ச் சுற்றளவில் இருக்கும். இதன்மூலம் அளக்கப்படும் திடப்பொருள்கள் (தானியங்கள்) ஒரு கிலோ எனவும், திரவப்பொருள்கள் (எண்ணைய்) ஒரு லிட்டர் அளவீடு செய்யப்பட்டன. இந்த அளவீடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்தன. பின்பு, வரையறை செய்யப்பட்ட எடைக்கற்கள் உள்ள தராசுகள் பயன்பாட்டுக்கு வந்த பின்பு,படிகளின் செல்வாக்கு மறையத் தொடங்கியது. மடத்துக்குளம் பகுதியிலுள்ளவர்கள் கூறுகையில், ‘தற்போது, அனைத்து வியாபாரிகளும் டிஜிட்டல் தராசுகளை பயன்படுத்தி எடையிடுகின்றனர். வரலாற்றில் அளவீடுகளின் அடிப்படையாகவும், சம்பள கணக்கீட்டின் முன்னோடியாகவும், இருந்த ’படிகள்’ தற்போது, வீடுகளிலுள்ள மங்கலப்பொருட்களில் ஒன்றாகிப்போனது,’ என்றனர்.