உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் நவராத்திரி திருவிழா அக். 13ல் துவக்கம்!

சதுரகிரியில் நவராத்திரி திருவிழா அக். 13ல் துவக்கம்!

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற நவராத்திரி திருவிழா அக். 13 ல் காப்புக்கட்டுடன் கோலாகலமாக துவங்குகிறது.   திருவிழா முடியும்வரை பக்தர்கள் மலைக்கு செல்ல 11 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி, பலாஅடி கருப்பசாமி, ஆனந்தவல்லியம்மன்  கோயில்கள் உள்ளன.   இங்கு முக்கிய திருவிழாவாக ஆடிஅமாவாசை, நவராத்திரி, சிவராத்திரி, தை அமாவாசை  விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.    இவற்றில் மற்ற திருவிழாக்கள் அனைத்தும் சுவாமிகளுக்காக கொண்டாடப்படுபவை.   இங்குள்ள ஒரே பெண் தெய்வமான  ஆனந்தவல்லியம்மனுக்காக கொண்டாடப்படும்  திருவிழா இந்த நவராத்திரி திருவிழா மட்டுமே.  இதில் அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.   இறுதிநாளில் மகிசாஷ்வரவர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி அம்பு எய்து மகிசாஷ்வர அரக்கனை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.    ஒன்பது நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவை காண தினமும் ஏராளமான பக்தர்கள் மலைக்கு செல்வார்கள்.    புகழ்பெற்ற இத்திருவிழா நாளைமறுநாள் (அக். 13) காப்புக்கட்டு வைபவத்துடன் துவங்குகிறது.    திருவிழாவின் இறுதிநாளான அக். 22 ல்  மதியம் 3 மணிக்கு ‘அம்புவிடும்’  நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.    இந்நிகழ்வுகளுக்காக அக்.13 ல் துவங்கி திருவிழாவிற்கு மறுநாள் அக்.23 வரை பக்தர்கள் தொடர்ந்து மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   நேற்று பிரதோஷம் என்பதால்  நேற்றே மலையின் நுளைவாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் சென்றுவருகின்றனர்.    நாளை அமாவாசைக்காக மலை திறக்கப்பட்டிருக்கும்.    நாளை மறுநாள் திருவிழாவிற்கான திறப்பும் உள்ளதால் தொடர்ந்து  14 நாட்கள் பக்தர்கள் மலைக்கு சென்றுவர பக்தர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.   இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !