சபரிமலை மேல்சாந்தி பட்டியலுக்கு கேரள ஐகோர்ட் அனுமதி!
சபரிமலை: சபரிமலையில் வரும் 18-ம் தேதி நடைபெறும் மேல் சாந்தி குலுக்கல் தேர்வுக்கு தயாரிக்கப்பட்ட பட்டியலுக்கு கேரள ஐகோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
சபரிமலையில் ஒவ்வொரு கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு ஒரு மேல்சாந்தி நியமிக்கப்படுகிறார். திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள், தந்திரிகள் என ஒரு கமிட்டி நடத்தும் இண்டர்வியூவில் தேர்ச்சி பெறுபவர்களின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. பின்னர் இவர்கள் பெயர்கள் துண்டு சீட்டில் எழுதப்பட்டு அதிலிருந்து ஒருவர் ஐயப்பன் சன்னதி முன் நடைபெறும் குலுக்கல் தேர்வில் தேர்வு செய்யப்படுகிறார்.
இந்த ஆண்டுக்கான குலுக்கல் தேர்வு வரும் 18-ம் தேதி நடக்கிறது, இதற்காக சபரிமலைக்கு 14 பேட்டியலும், மாளிகைப்புறத்துக்கு ஐந்து பேர் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்: சபரிமலை: சுரேஷ்குமார்- மாவேலிக்கரை, தாமோதரன் நம்பூதிரி-திப்பலசேரி திருச்சூர், கோசாலை விஷ்ணுவாசுதேவன்- வஞ்சியூர் திருவனந்தபுரம், ஜெயராமன்நம்பூதிரி- தளிபறம்பு கண்ணூர், மனோஜ்-கோட்டய்க்கல் மலப்புறம், சங்கரன்நம்பூதிரி- மண்ணார்காடு கோட்டயம், ஈஸ்வரன் நம்பூதிரி- மாவேலிக்கரை, ஏழிக்கோடு கிருஷ்ணன்நம்பூதிரி- எர்ணாகுளம், நாராயணன் நம்பூதிரி- வைக்கம், உண்ணிகிருஷ்ணன்- ஒற்றப்பாலம், கிருஷ்ணன் நம்பூதிரி- கரமனை, ஸ்ரீதரன் நம்பூதிரி- பத்தணந்திட்டை, முரளிதரன்- ஒற்றப்பாலம், திலீபன் நம்பூதிரி- ஆலப்புழா. மாளிகைப்புறம்: நாராயணன் நம்பூதிரி- சங்கனாசேரி, மனோஜ்- மலப்புறம், சங்கரன்நம்பூதிரி- மன்னார்காடு கோட்டயம், நாராயணன் நம்பூதிரி- திருவனந்தபுரம், உண்ணிகிருஷ்ணன்- திருச்சூர்.
இந்த பட்டியலுக்கு எதிராக நேர்முகத்தேர்வில் கலந்து கொண்ட இரண்டு பேர் தாக்கல் செய்த மனுக்களை கேரள ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. பட்டியலுக்கு அங்கீகாரம் வழங்கிய ஐகோர்ட் நீதிபதிகள், தேவசம்போர்டின் உறுப்பினர்கள் பதவிகாலம் உடனடியாக நிறைவுக்கு வருவதால், சபரிமலை காரியங்களை கவனிக்க முதன்மை ஆணையர் ஒருவரை நியமிக்க உத்தரவிட்டது. இந்த பதவிக்கு ஏற்கெனவே கொச்சி, குருவாயூர் தேவசம்போர்டில் பொறுப்புகளை கவனித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கோபால மேனோன் பெயரை பரிசீலிக்கலாம் என்றும் நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.