பத்மநாப சுவாமி பொக்கிஷங்களை இரும்பு கதவுகள் அமைத்து பாதுகாக்க உத்தரவு!
புதுடில்லி: பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறை பொக்கிஷங்களை பாதுகாக்க இரும்பு கதவுகள் அமைக்கப்பட வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் பாதாள அறைகளில், ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்பொக்கிஷங்களை பாதுகாக்க, மாநில அரசு சிறப்பு போலீஸ் ஏற்பாடு செய்துள்ளது. இப்பொக்கிஷங்கள் குறித்து மதிப்பீடு செய்ய, ஐந்து பேர் கொண்ட கமிட்டியை சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் நியமித்தது. இதன் தலைவராக, தேசிய அருங்காட்சியக இயக்குனர் ஆனந்த்போஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பொக்கிஷங்கள் குறித்து போலீசின் நம்பிக்கைக்குரிய வீடியோ கிராபரும், புகைப்படக் கலைஞரும் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலமாக புகைப்படங்கள் எடுக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களுக்கு மேலும் பாதுகாப்பாக இருக்க, இரும்பு கதவுகள் கொண்டு உறுதிமிக்க அறைகள் அமைக்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் பொக்கிஷங்களை வெளியே எடுக்கும்போது, ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதை அறிய, வல்லுனர்களை கமிட்டியினர் உதவிக்கு அழைக்கலாம். கோவிலில் பாதாள அறைகளில் ஏ, சி, டி, இ, எப், என ஐந்து அறைகள் ஏற்கனவே திறக்கப்பட்டு, அவற்றில் உள்ளவை குறித்து ஆய்வு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இரண்டாவது அறையான பி அறை மட்டும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. மேலும், இவ்வறையை மறு உத்தரவு வரும் வரை திறக்க வேண்டாம் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொக்கிஷங்களில் ஏதாவது கலைநுட்பப் பொருட்கள் காட்சிக்கு வைக்க பயன்படுமா என்பதையும் கமிட்டியினர் ஆய்வு செய்ய வேண்டும். மதிப்பீடு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக எந்தவொரு தடங்கலுமின்றி நடைபெற வேண்டும். இதற்கான செலவுகளை மாநில அரசும், கோவில் நிர்வாகமும் சேர்ந்து ஏற்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.