உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி கோயிலில் கிருத்திகை கோலாகலம்: கடல் அலையாய் பக்தர்கள்!

வடபழனி கோயிலில் கிருத்திகை கோலாகலம்: கடல் அலையாய் பக்தர்கள்!

சென்னை : வடபழனி முருகன் கோவில், கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் ஆடிக் கிருத்திகை திருவிழா கோலாகலமாக நடந்தது. பல்வேறு காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து பக்தர்கள் முருகனை தரிசித்தனர்.முருகனை, கார்த்திகை பெண்கள் வளர்த்ததால், மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திர நாளன்று முருகனை பக்தர்கள் தரிசிப்பது சிறப்பு. அந்த வகையில் ஆடி மாதம் வரும் கார்த்திகை நட்சத்திர நாள், ஆடிக்கிருத்திகை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.வடபழனி முருகன் கோவிலில், நேற்று ஆடித்திருவிழா கோலாகலமாக நடந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வந்தனர். அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் வரத் தொடங்கிய, நிலையில் காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கத் துவங்கியது.பால் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். பக்தர்களில் பலர் மொட்டை அடித்து முருகனுக்கு காணிக்கை செலுத்தினர். இதற்காக அதிகாலை முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, 5 மணி முதல் பகல் 12 மணி வரை முருகன், தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை ராஜ உடை அலங்காரம், பின்னர் 4 மணி முதல் இரவு 11 மணி வரை சந்தனகாப்பு புஷ்ப அலங்கார தரிசனமும் நடைபெற்றது. பக்தர்கள் முருகனை தரிசனம் செய்யவும், அர்ச்சனை செய்யவும், காணிக்கைகள் செலுத்தவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.பொது தரிசனம் மட்டுமின்றி, கட்டண சிறப்புத் தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வழக்கம் போல் பெண்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அறநிலையத் துறை அமைச்சர் சண்முகநாதன், ஆணையர் முத்தையா கலைவாணன் ஆகியோரின் ஆலோசனையின் படி, ஏற்பாடுகளை கோவில் கமிஷனர் காவேரி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.விழா குறித்து கோவில் கமிஷனர் காவேரி கூறுகையில், பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், எதிர்பார்த்ததை விட அதிகளவில் கூட்டம் உள்ளது. பங்குனி உத்திரம் விழாவிற்கு அடுத்தப்படியாக அதிகளவில் கோவிலில் பக்தர்கள் இந்த தினத்தில் தான் கூடுகின்றனர் என்றார்கந்தக்கோட்டம்: சென்னை பூங்கா நகரில் உள்ள கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலில், ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி நேற்று காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தரிசனம் நடந்தது. 7 மணிக்கு மூலவருக்கு பால், பஞ்சாமிர்தம், பன்னீர் அபிஷேகம் நடந்தது. தீப, தூப ஆராதனைகளும் நடந்தன.சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமார சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் விதவிதமான காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தி, முருகனை வழிபட்டனர். மாலையில், வெள்ளித் தேரில் முத்துக்குமார சுவாமி வீதி உலா நடந்தது.கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ஐந்து லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட, குளிர்ந்த நீர் வழங்கும் இயந்திரத்தை அமைச்சர் சண்முகநாதன் தொடங்கி வைத்தார். சீனியர் அறங்காவலர் முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து, முத்துக்குமார சுவாமியை தரிசித்தனர்.இதுபோன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு முருகன் கோவில்களிலும், ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !