உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்கா பூஜையுடன் கொலு வழிபாட்டை நிறைவு செய்த பெண்கள்!

துர்கா பூஜையுடன் கொலு வழிபாட்டை நிறைவு செய்த பெண்கள்!

வத்திராயிருப்பு: நவராத்திரி திருவிழா முடிவடைந்ததை தொடர்ந்து  வீட்டில் கொலுவழிபாடு செய்த பெண்கள் துர்காபூஜையுடன் கலசத்தை அகற்றி கொலுவழிபாட்டை நிறைவு செய்தனர். இந்துக்களுக்கான பண்டிகைகளில் நவராத்திரி திருவிழா முழுக்க பெண்களுக்கான ஒரு பண்டிகையாகும்.  எனவே  பெண்கள் இதனை ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவார்கள்.   இதற்காக வீட்டில் கொலு பொம்மைகளை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்து 9 நாட்களும் பெண்கள் விரதமிருப்பார்கள்.  இவ்வாறு வீட்டில் கொலு வைப்பதால் அக்குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதுடன், சுபிட்சம் கிடைத்து  நல்லகாரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.  9 நாட்கள் நடக்கும் இந்த விழாவின் இறுதிநாளில்  தாங்கள் வணங்கும் துர்க்கையம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்து முதல்நாள் வைக்கப்பட்ட பூரண கும்பத்தை அகற்றுவார்கள்.

பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு முறைகளை உள்ளடக்கிய  இந்த நவராத்திரி விழா அக். 13 ல் துவங்கியது.   பெண்கள் வீடுகளை சுத்தம் செய்து பொம்மைகளை கொலு தர்பாரில் வரிசைப்படுத்தியும்,  இறைவனது நாடகங்களையும், லீலைகளையும் காட்சிப்படுத்தியும் வைத்தனர்.   அருகில் வசிக்கும் பெண்களை கொலுவிற்கு அழைத்து அவர்களுக்கு குங்குமம், மஞ்சள், ஆடைகள், பிரசாதம் வழங்கினர்.   தொடர்ந்து 9 நாட்கள் பூஜைகள் செய்து வழிபட்டனர்.  நேற்று நவராத்திரிக்கான கொலுவழிபாடு  முடிவடைந்தது.  பத்தாம் நாளில் கலசம் அகற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் மகிசாசுரவர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளிய துர்க்கை அம்மன், மகிசாஷ்வர அரக்கனை அழித்து சாந்தமாகிய பின் அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !