மைசூரு அரண்மனையில் யானைகளுக்கு வெல்லம், கரும்பு
மைசூரு: மைசூரு அம்பாவிலாஸ் அரண்மனையில், ஆயுத பூஜை நேற்று கொண்டாடப்பட்டது. யது வம்சத்தின், புதிய மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், ஆர்வத்துடன் பூஜைகள் செய்ததை, ராணி பிரமோதா தேவி, அரச குடும்பத்தினர் கண்டுகளித்தனர். ஆயுத பூஜையை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 5:00 மணியில் இருந்து, அரண்மனையில் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள், பூஜைகள் நடந்தன. அரண்மனை வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சண்டி ஹோமம், கணபதி ஹோமம் உட்பட பல வகையான ஹோமங்களை, அரண்மனையின் தலைமை அர்ச்சகர் நடத்தி வைத்தார். அம்பாவிலாஸ் அரண்மனை வளாகத்திலேயே உள்ள கோடி சோமேஸ்வரர் கோவிலில், யதுவீர் சிறப்பு பூஜைகள் செய்தார். அரண்மனையின் பட்டத்து யானை, குதிரை மற்றும் பசுவுக்கும் மலர் துாவி, பூஜைகள் செய்தார். இதே வேளையில், தசரா உற்சவத்தின் முக்கிய அம்சமான ஜம்பு சவாரியில் கலந்து கொண்டு, தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜுனா உட்பட, 12 யானைகளுக்கும், வனத்துறை அதிகாரிகள் பூஜை செய்தனர். யானைகளுக்கு வெல்லம், கரும்பு, தேங்காய், வாழைப்பழங்கள் வழங்கப்பட்டன.அரண்மனையில், அரசர்கள் போருக்கு பயன்படுத்திய வாள்கள், கேடயங்கள், பீரங்கிகள், ஈட்டிகள் உட்பட அனைத்து ஆயுதங்களுக்கும், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ராணி பிரமோதா தேவி, யதுவீரின் வருங்கால மனைவி திரிஷிகா குமாரி உட்பட குடும்பத்தினர், மாடவீதியில் நின்று பார்த்தனர். நேற்று மாலையும், அரண்மனையில் பல வகையான ஆன்மிக, கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. வறட்சி, விவசாயிகள் தற்கொலையை காரணம் காட்டி, அரசு இம்முறை தசரா திருவிழாவை எளிமையாக கொண்டாடினாலும், அரச குடும்பத்தினர் வழக்கம் போல், சிறப்பாகவே கொண்டாடினர். சம்பிரதாயப்படி செய்ய வேண்டிய அனைத்து பூஜை, புனஸ்காரங்களை குறைவின்றி செய்தனர்.