சந்தவெளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வெள்ளகுளம் பகுதியில் உள்ள சந்தவெளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று கோலாகலமாக நடைபெற்றது.பெரிய காஞ்சிபுரம், வெள்ளகுளம் பகுதியில், சந்தவெளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.இந்த கோவில் கும்பாபிஷேகம், 40 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு முன், கோவில் ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் துவங்கின. மூன்று அடுக்கு ராஜகோபுரம் உள் பிரகாரத்தில் நவகிரகம் மற்றும் அம்மன் சன்னிதி, மூலவர் சன்னிதி போன்றவை தனியார் பங்களிப்பில் சீரமைக்கப்பட்டன. கடந்த செவ்வாய்க்கிழமை இதற்கான யாகம் துவங்கி, நேற்று காலை நிறைவடைந்தது. புதன் கிழமை ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமானத்திற்கு கலசம் பதிக்கப்பட்டது. மொத்தம் 30.35 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் முடிந்து, நேற்று, காலை 8:40 மணியளவில் ராஜகோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அதை தொடர்ந்து, மற்ற சன்னிதிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.