கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பரிவேட்டை
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாவின் நிறைவாக பரிவேட்டை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழா நவராத்திரி திருவிழா. இந்த ஆண்டு திருவிழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. காலையிலும், மாலையிலும் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிறைவு நாள் விழாவான நேற்று விஜயதசமி நாளில் அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் ஊர்வலம் பஞ்சலிங்கபுரம் புறப்பட்டது. ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் மற்றும் குதிரைகள் அணிவகுத்து வந்தது. மாலை ஆறு மணிக்கு பஞ்சலிங்கபுரத்தில் பவனி வந்தடைந்தது. அங்கு பாணாசுரன் என்ற அரக்கனை தேவி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஊர்வலம் கோயிலுக்கு திரும்பி வந்ததும் முக்கடல் சங்கமத்தில் தேவிக்கு ஆராட்டு நடைபெற்று விழா நிறைவு பெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி நேற்று மதியம் முதல் கன்னியாகுமரியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டிருந்தது.