சிவன் கோவில்களில் ஐப்பசி அன்னாபிஷேகம் கோலாகலம்!
திருத்தணி: ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, சிவன் கோவில்களில், நேற்று, அன்னாபிஷேகம் விழா மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரு த்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில் உள்ள காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், நேற்று, ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபி ஷேகம் விழா நடந்தது.இதையொட்டி, கோவில் வளாகத்தில், காலை 11:00 மணிக்கு, ஒரு யாகசாலை, ஒன்பது கலசங்கள் வைத்து, நவகலச பூஜை, ஹோமம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, 100 கிலோ அரிசி, சமைத்து, மூலவருக்கு அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு, 11:00 மணிக்கு வடுக பைரவருக்கு மகா சாந்தி பூஜை மற்றும் 108 பக்தர்கள் தேங்காயில் விளக்கு ஏற்றி பூஜை நடத்தினர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல், திருத்தணி பகுதியில் உள்ள, சதாசிவ லிங்கேஸ்வரர், வீரட்டீஸ்வரர், தாடூர் கடலீஸ்வரர், அகூர் அகத்தீஸ்வரர், தலையாறிதாங்கல் ஷீரடி சாய்பாபா கோவில் உட்பட ஒன்றியத்தில் உள்ள, அனைத்து சிவன் கோவில்களில் பவுர்ணமியை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னாபிஷேகம் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.