உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொலிவிழந்த திருவேட்டீஸ்வரர் கோவில்!

பொலிவிழந்த திருவேட்டீஸ்வரர் கோவில்!

கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததாலும், மாநகராட்சி ஒத்துழைக்காததாலும்  திருவேட்டீஸ்வரர் கோவில் பொலிவிழந்து வருகிறது. சென்னை, திருவல்லிக்கேணி சன்னிதி தெருவில் உள்ள, திருவேட்டீஸ்வரர் கோவில், 1000 ஆண்டுகள் பழமையானது. ராகு, கேது பரிகார தலமாக உள்ளது.  மேலும், சிவன், அம்பாள், சண்முகர் என, மூன்று  தெய்வங்களுக்கும் தனித்தனியே கொடிமரங்கள் உள்ளன. பெருமாளை மணக்க, மகாலட்சுமி இங்குள்ள சிவனை வழிபட்டதாக ஐதீகம். தற்போது, கோவிலின் குளம் சிதிலமடைந்து உள்ளது. மழைநீரோடு, கழிவுநீரும் குளத்துக்குள் வருவதால், அதில் உள்ள தண்ணீர் மாசடைந்து உள்ளது. குளத்தின் படிக்கட்டுகள் விரிசல் விட்டுள்ளன. கோவில் சுற்றுச்சுவரை சுற்றி, குப்பை கொட்டப்பட்டுள்ளது. மாநகராட்சி முறையாக குப்பையை அகற்றுவதில்லை என, பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த, 2002ல் கும்பாபிஷேகம் நடந்த கோவிலில், 12 ஆண்டுகள் கடந்தும் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.  கோவில் தேருக்கு என, தேர் நிறுத்தங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதனால், இரண்டு மரத்தேர்கள் வெயிலிலும், மழையிலும் நிற்கின்றன.  தேரின் அடியில் குப்பை தேங்கி கிடக்கிறது. அதில் உள்ள மர சிற்பங்கள் அனைத்தும் சிதில மடைந்து விட்டன.  முறையாக திருப்பணி செய்து, கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகம் கூறியதாவது: கோவிலுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த உள்ளோம். அதற்காக, திருப்பணி குறித்த விளம்பர பலகை கோவிலுக்குள் வைக்கப்பட்டு உள்ளது.  விரைவில் தேர் நிலையம் கட்டப்படும். வாகனங்களும், தேரும் கும்பாபிஷேக திருப்பணியின் போதே செப்பனிடப்படும். இவ்வாறு கோவில் நிர்வாகம் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !