பத்மநாப சுவாமி கோவிலில் அதிநவீன பாதுகாப்பு!
திருவனந்தபுரம் : பத்மநாப சுவாமி கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களை பாதுகாக்க, அதிநவீன சென்சர் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், அப்பகுதியில் ஊசி விழுந்தால் கூட, அதை கேமராக்கள் மிகவும் துல்லியமாக காட்டிக் கொடுத்து விடும். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்திப் பெற்ற பத்மநாபசுவாமி கோவில், பாதாள அறைகளில் ஒன்றரை லட்சம்கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கோவிலுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. வெளி உலகுக்கு இத்தகவல் தெரிந்து விட்டதால், பொக்கிஷங்களை பாதுகாக்க, பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவிலில் பாதாள அறைகள் பகுதியில், 300 மீட்டர் சுற்றளவுக்கு எந்த அசைவு ஏற்பட்டாலும், அதை கண்டுபிடித்து பதிவு செய்ய வசதியாக, அதிநவீன சென்சர் கேமராக்கள் அங்கு பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பாதாள அறை பகுதிகளில், சிறிய வெளிச்சம் விழுந்தால் கூட, அடுத்த சில நொடிகளில் போலீஸ் கட்டுப்பாட்டறைக்கு அது காட்டிக் கொடுத்து விடும்.
இக்கேமராக்கள் பகலும், இரவும் செயல்படும். இது தவிர கோவிலைச் சுற்றிலும், கோட்டை மதில் பகுதியிலும் சென்சர் கேமராக்கள், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இவற்றை கண்காணித்து, அவற்றிலிருந்து வரும் தகவல்களை பெற, நடமாடும் கட்டுப்பாட்டறைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 10 கோடி ரூபாய் செலவில், இரு வாகனங்கள் வாங்க ஆலோசிக்கப்படுகிறது. இதுகுறித்து, விரிவான அறிக்கையை போலீசார். மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். அறிக்கை மீது, மாநில அரசு அனுமதி வழங்கிய உடன், ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, வாகனங்கள் வாங்கப்பட்டு, நடமாடும் கட்டுப்பாட்டறை செயல்படத் துவங்கும். இது தவிர, பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை திறக்காமலேயே அதற்குள் உள்ள பொருட்கள் குறித்தறியும், அதிநவீன ஸ்கேனர் இயந்திரங்கள், ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி.டி.வி.,), மொபைல் ஜாமர் கருவிகள், கோவிலுக்குள் செல்லும் எல்லா நுழைவு வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர்கள் என. பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவில் பாதுகாப்பிற்கென, கோவிலைச் சுற்றிலும் வலம் வரும் கமாண்டோக்களுக்கு அதிநவீன எம்.16 ரக தானியங்கி துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் ஒரே நேரத்தில், 80 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு மூன்று ஷிப்டுகளில், 24 மணிநேரமும் கோவில் பாதுகாப்புக்கென, 240 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.