சபரிமலை நடை நவ.16 ல் திறப்பு: ஏற்பாடுகள் தயார்!
சபரிமலை: சபரிமலை மண்டல காலத்திற்காக வரும் ௧௬ம் தேதி மாலை மாலை 5.30 மணி-க்கு திறக்கிறது. இதற்காக 62 கோடி ரூபாயில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மண்டல கால பூஜைக்காக வரும் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்படும். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்ததும், மண்டல காலம் துவங்கும். பக்தர்களின் வசதிக்காக மேம்பாட்டு பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு வருகின்றன. மரக்கூட்டத்துக்கும் சரங்குத்திக்கும் இடையே, பக்தர்கள் வரிசைக்கூடங்கள் (கியூ காம்ப்ளக்ஸ்), சன்னிதானத்தில் நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், மாளிகைப்புறம், பம்பையில் கழிவறைகள், பம்பையில் சர்க்கரை கிடங்கு, பம்பையில் ஓட்டல் காம்ப்ளக்ஸ், அன்னதான மண்டபம், நிலக்கல்லில் வாகன நிறுத்தம் உள்ளிட்ட திட்டங்கள் 62 கோடி ரூபாயில் நடக்கின்றன. வரும் ௧௦ம் தேதி திறப்பு விழா நடக்கிறது.சன்னிதானத்தில் அமைக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ரூ.22 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. நிலக்கல்லில் 10 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தவசதிகள் செய்யப்பட்டுள்ளன.மண்டல காலத்தில் மட்டும் சபரிமலையில் பணிகளுக்காக 1000 தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான நேர்முகத்தேர்வு நேற்று தொடங்கியது.