தூத்துக்குடி சிவன் கோயில் ஐப்பசி திருவிழா தேரோட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர். தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் பாகம்பிரியால் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டு தோறும் நடக்கும். இந்த ஆண்டு அக்.,28 ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தினமும் மாலை அம்மன் பல்வேறு அலங்காரங்களில், பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. காலை 9 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் கர கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வருகை தந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனை வணங்கினர். தேருக்கு முன்பாக யானை, ஒட்டகம், நாட்டுப்புற கலை நிகழ்சிகளுடன் ஊர்வலம் சென்றனர் பக்தர்கள். காலை 11 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி அஜித், கும்பாபிஷேக கமிட்டி தலைவர் ராஜா சங்கரலிங்கம், செயலாளர் விநாயகமூர்த்தி உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.