மயிலாடுதுறை காவிரியில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடல்!
மயிலாடுதுறை: கங்காதேவி முதலான அனைத்து நதிகளும் தங்களின் பாவச்சுமைகள் நீங்க வழிசெய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டிய போது பாவங்களை போக்க ஐப்பசிமாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி நதியில் நீராடினால் உங்கள் பாவச்சுமைகள் குறையும் என்று சிவபெருமான் வரமளித்தார். அதன்படி காவிரியில் ஐப்பசி மாதம் முழுவதும் புனிதநீராடினால் அனைவரின் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.அதனால் காசிக்கு இணையான தலமாக மயிலாடுதுறை விளங்கி வருகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த துலா உற்சவம் மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கும் கொண்டாடப்படு கிறது. காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆண்டு தோறும் ஐப்பசி மாத இறுதியில் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடுவது வழக்கம். மயிலாடுதுறை வருகை புரிந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று காலை 6 மணியளவில் காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் மூத்த வக்கீல் குஞ்சிதபாதம், திருக்கடையூர் கோயில் தலைமை அர்ச்சகர் விஸ்வநாத குருக்கள், முன்னாள் எம்.எல்.ஏ.ஜெகவீரபாண்டியன், சங்கரா மெட்ரிக் பள்ளி தாளாளர் வெங்கட்ராமன், செயலாளர் தியாகராஜன், சீதாராமன், ரமணி, நந்திகேஸ்வரர் நற்பணி மன்ற செயலாளர் கவிஞர் ராதாகிருஷ்ணன், பாஜ மாவட்ட பொருளாளர் முத்துக்குமரசாமி உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.