அங்காளம்மன் கோவிலில் 138 பவுன் நகை ரூ.6.50 லட்சம், 5 கிலோ வெள்ளி கவசம், கிரீடம் திருட்டு!
குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிபாளையம் தெருவில், காந்திநகர் முதல் வீதி உள்ளது. இங்கு அங்காளம்மன் டிரஸ்ட்க்கு சொந்தமான, அங்காளம்மன் கோவில் உள்ளது. பூசாரியாக அங்கப்பன் மற்றும் காந்தி உள்ளனர். நேற்றுமுன்தினம் பூஜைகளை முடித்துவிட்டு பூசாரிகள் இருவரும், வழக்கம் போல் கோவிலை பூட்டி சென்றனர். கோவில் அருகிலேயே காந்தி குடியிருந்து வருகிறார். அங்கப்பன் சற்று தள்ளி வசித்து வருகிறார். நேற்று காலை, காந்தி வழக்கம்போல் கோவிலை திறக்க வந்தார். அப்போது, கோவில் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து, அங்கப்பன் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகளுக்கு தகவல் தரப்பட்டது. நாமக்கல் எஸ்.பி., செந்தில்குமார், பரமத்தி வேலூர் டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில், கோவில் வளாகத்தை சுற்றி வந்து வெளியில் கொஞ்ச தூரம் ஓடி நின்றது. கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
இது குறித்து, பூசாரிகள் அங்கப்பன், காந்தி ஆகியோர் கூறுகையில்,கோவில் திருட்டு சம்பவத்தில், பீரோவின் பூட்டை உடைத்து, 138 பவுன் தங்க நகைகள், 6.50 லட்சம் ரூபாய் ரொக்கம், 5 கிலோ வெள்ளி கவசம் மற்றும் கிரீடம் ஆகியவை திருடப்பட்டுள்ளது,” என்றனர். சமீபத்தில், கோவிலில், கடந்த மாதம், 13ம் தேதி முதல் நவராத்திரி விழா நடந்துள்ளது. விழாவிற்கு வந்தவர்கள் அம்மன் அலங்காரத்தை கண்டு, திருட்டு வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.