உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்தசஷ்டி விழா துவக்கம்: விரத முறை!

கந்தசஷ்டி விழா துவக்கம்: விரத முறை!

கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?சூரபத்மன் தவமிருந்து, சிவனின் ஆற்றலைத் தவிர வேறு யாராலும் தன்னைக் கொல்ல முடியாது என்று வரம் பெற்றான். வரத்தின் பலத்தால், தேவர்களைத்துன்புறுத்தினான். தேவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி சிவனைச் சரணடைந்தனர். சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்க, அவை சரவணப் பொய்கையில் விழுந்து குழந்தைகளாக மாறின. அந்தக் குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். பார்வதி ஆறு குழந்தைகளையும் சேர்த்து அணைக்க, ஆறுமுகமும், பன்னிரு கைகளுமாக ஒரே உருவமாக மாற்றினாள். "கந்தன் என பெயர் பெற்ற அந்தக்குழந்தைக்கு, தன் சக்தியை ஒன்று திரட்டி வேலாக கொடுத்தாள்.சக்தி வேலுடன் புறப்பட்ட கந்தன், சூரபத்மனை சம்ஹாரம் செய்து தேவர்களைக் காப்பாற்றினார். இதன் அடிப்படையில், ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாளான வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறுநாள் கந்தசஷ்டி விரதம் இருப்பர். ஆறாவது நாளான சஷ்டியன்று, முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடத்தப்படும்.

விரத முறை: * அதிகாலை 4.30-6 மணிக்குள் நீராட வேண்டும். நாள்முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், பால்,பழம் மட்டும் சாப்பிடலாம். ஓரளவு தாக்கு பிடிப்பவர்கள் ஒருவேளை உணவும், மற்ற நேரங்களில் பால், பழமும் சாப்பிடலாம். உடல்நிலை காரணமாக சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம். ஒரு காலத்தில் வெறும் தண்ணீருடன் விரதம் இருந்தவர்கள் உண்டு.
* முருகனுக்குரிய மந்திரங்களான "ஓம் சரவணபவ "ஓம் சரவணபவாயநம "ஓம் முருகா ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுதும் ஜெபித்து வர வேண்டும்.
* திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்ய வேண்டும்.

வழித்துணையாய் வா முருகா!

*முழுநிலவு போல குளிர்ச்சியான முகத்துடன் விளங்கும் முருகப்பெருமானே! வெற்றி தரும் வேலாயுதத்தை தாங்கியவனே! உன்
அன்பைப் பெற என் மனம் ஏங்கித் தவிக்கிறது. என்னை உன் அடிமையாக ஆட்கொள்ள வந்தருள வேண்டும்.
*முருகா! என் கண்கள் காண்பதாக இருந்தால் உன் திருவடித் தாமரைகளையே காணட்டும். என் உதடுகள் உந்தன் திருப்புகழை மட்டுமே பேசட்டும். இரவும் பகலும் என் மனம், உன் பெருமையை மட்டும் சிந்தித்திருக்கட்டும். இந்த அரிய வரத்தை நீ தந்தருள வேண்டும்.
*மாமரமாய் நின்ற சூரனை இருகூறாகப் பிளந்த வெற்றி வீரனே! கற்றவர்கள் புகழ்ந்து போற்றும் ஞானபண்டிதனே! செவ்வானம் போல சிவந்த மேனியனே! கடம்பம், முல்லை மலர்களை விரும்பி அணிபவனே! அறிவுக்கண்களைத் திறந்து ஞானத்தைத் கொடுத்தருள்வாயாக.
* முத்துப்போல பிரகாசிக்கும் புன்னகையுடன் காட்சி தருபவனே! உமையம்மையை மகிழ்விக்க வந்த சிவ பாலனே! அழகெல்லாம் ஒன்று திரண்டு வந்தது போல, கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குபவனே! அருட்கண்களால் என்னைக் காத்தருள்வாயாக.
*எங்கள் எண்ணம், சொல், செயலுக்கு எட்டாத பரம்பொருளே! ஆறுமுகப்பெருமானே! எனக்கு வேண்டிய வரங்களை வாரி வழங்க
பன்னிரு கரங்களுடன் வந்தருள்வாயாக.
*கருணைக்கடலே! கந்தப்பெருமானே! நமசிவாயத்தின் நெற்றிக்கண்ணில் உதித்த அருட்சுடரே! வண்ண மயில் மீது வலம் வரும் சுப்பிரமணியனே! வள்ளி மணாளனே! இதயமாகிய குகையில் வீற்றிருக்கும் குகப்பெருமானே! உனது திருவடிகளை சிந்திக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக.
* ஆனைமுகப் பெருமானின் தம்பியே! ஆதிபராசக்தியின் புதல்வனே! வள்ளிக்கு வாய்த்தவனே! குன்றெல்லாம் குடிகொண்டிருக்கும் குமரப்பெருமானே! சஷ்டி நாதனே! சூரபத்மனுக்கும் பெருவாழ்வளித்த புண்ணியமூர்த்தியே! எங்கள் தவறையும் மன்னித்து அருள்வாயாக.
*திருமாலின் மருமகனே! தெய்வானையை மணந்த வடிவேலனே! மலர்ந்த தாமரை போல எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவனே! சேவல் கொடியோனே! மலைமகள் பார்வதி பெற்ற பாலகனே! மயில் வாகனனே! கிரகதோஷம் எதுவும் என்னைத் தாக்காமல் காத்தருள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !