உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

வத்திராயிருப்பு: கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. கொடிக்குளம், நெடுங்குளம், சேதுநாராயணபுரம், கான்சாபுரம், உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் மழைவேண்டி அம்மனை வழிபடுவார்கள். ஒருவாரம் கலைவிழா , இறுதிநாளில் தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு விழா நவ., 4 ல் துவங்கியது. இசை, நடனம், நாடகம், ஆன்மிகச் சொற்பொழிவுகளுடன் 6 நாட்கள் கலைவிழா நடந்தது.

தேரோட்டம்: 7 ம்நாளான நேற்று தேரோட்டம் நடந் தது. அதிகாலை அம்மன் தேரில் எழுந்தருள தேரானது ரதவீதிகள் வழியாக வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஆடு, கோழி பலியிட்டும், மாவிளக்கு ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தேர் மதியம் 11.30 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. அம்மன் கோயிலுக்கு எழுந்தருள மாலையில் மஞ்சள் நீராட்டு நடந்தது.

பாதுகாப்பு: பின்னர் இரவு அம்மன் பக்தர்களுக்கு பிரியாவிடை கொடுத்த பின் அம்மன் சிலையை நீரில் கரைப்பதற்காக எடுத்துச் சென்றனர். கடந்த இருவாரங்களாக பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடந்ததை தொடர்ந்து வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் ஆயுதப்படை போலீசாருடன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !