ராமநாதபுரம் கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்
ராமநாதபுரம்: கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு நேற்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை தரிசனம் செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து விரதம் துவக்குவது வழக்கம். இந்தாண்டு கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு நேற்று காலை கோயில் களுக்கு சென்று மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் விரதம் துவங்கினர். ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோயில், பேரக்கண்மாய், உச்சிப்புளி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஐயப்பன் கோயில்களில் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். இதை முன்னிட்டு கோயில்களில் நேற்று அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கினர். இதையொட்டி மூலவர் வல்லபை ஐயப்பன், விநாயகர், மஞ்ச மாதா தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதிகாலை 5:30 மணியளவில் கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம் நடந்தது. இரவு 8 மணியளவில் சரணகோஷங்கள், பக்தி பாடல்கள் பாடப்பட்டன. அன்னதானம் நடந்தது. தலைமை குருசாமி வல்லபை மோகன் சாமி, வழிபாட்டுக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.