சென்னிமலையில் நான்கு வீதிகளில் சூரசம்ஹாரம்!
சென்னிமலை: கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலையில், நான்கு ரத வீதிகளிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டு களித்தனர். சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், மற்றும் திருக்கல்யாண விழா, கடந்த 12 ம் தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து, கடந்த, 5 நாட்களாக, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான, சூரனை வதம் செய்யும், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, நேற்று வெகு விமர்சையாக நடந்தது. இதையொட்டி, நேற்று இரவு, உற்சவர் மலை அடிவாரத்தில் எழுந்தருளினார். 8.30 மணிக்கு சிறப்பு வாணவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா தொடங்கியது. சென்னிமலை நான்கு ரத வீதிகளிலும் நடந்த, சூரன் வதம் செய்யும் நிகழ்ச்சியை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷ்ம முழங்க, நேரில் கண்டு களித்தனர். மேற்கு ரத வீதியில் ஜெகமகாசூரன் வதம் செய்தும், வடக்கு ரத வீதியில் சிங்கமுகசூரன் வதமும், கிழக்கு ரத வீதியில் வானுகோபன் வதமும், தெற்கு வீதியில் சூரபத்மனை முருகப்பெருமான் இறுதியாக வதம் செய்யும் நிகழ்சியும் நடந்தது. இதை தொடர்ந்து, முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கைலாசநாதர் கோவிலில் ஏழுந்தருளினார். இன்று காலை, 11 மணிக்கு, முருகப்பெருமான் தெய்வானையை மணம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.