உடுமலை சூரசம்ஹார விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
உடுமலை: கந்தசஷ்டியை முன்னிட்டு, பாப்பான் குளம், ஞானதண்டாயுதபாணி கோவில், உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில்களில், சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடந்தது; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி விழா, நவ., 12ல் துவங்கியது; இன்று சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. மடத்துக்குளம், பாப்பான்குளத்தில் உள்ள ஞானதண்டாயுதபாணி கோவில், உடுமலை, பழநி ரோட்டில் உள்ள பிரசன்ன விநாயகர் கோவில், முத்தையாபிள்ளை லே-அவுட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவில் மற்றும் போடிபட்டியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவில்களில், கந்தசஷ்டி விழா, நவ., 12ம் தேதி சிறப்பு அபிேஷக அலங்கார பூஜையுடன் துவங்கியது.
சூரசம்ஹார விழா முன்னிட்டு, நேற்று காலை தண்டாயுதபாணி சுப்ரபாதம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, வீரவேல் முருகன் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். வெற்றிவேல் முன் செல்ல, பக்தர்கள் முன்னிலையில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கிழக்கு திருமுற்றத்தில் வெற்றி வாகை சூடப்பட்டது; மயில்வாகனம், சேவல் கொடி ஏற்றப்பட்டது. இரவு, 7:30 மணிக்கு, மகா தீபாராதனையும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. இரவு, 8:30 மணிக்கு, சுவாமிக்கு வென்னீர் அபிேஷகம், புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடந்தது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள சுப்ரமணியசுவாமி சன்னதியில், நேற்று காலை, 8:30 மணிக்கு, யாகசாலை வேள்வி பூஜையும், பிற்பகல், 3:15 மணிக்கு, வேல்வாங்கும் உற்சவமும், மாலை, 4:00 மணிக்கு, சுவாமி புறப்பாடும், சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, மகா அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று திருக்கல்யாண உற்சவம்: கந்தசஷ்டி பெருவிழா நிறைவு நாளான இன்று, பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி கோவில் மற்றும் உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், முத்தையாபிள்ளை லே-அவுட்டில் உள்ள சக்தி விநாயகர் கோவில்களில், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதையடுத்து ஞானதண்டாயுதபாணி கோவிலில் இன்று காலை, 7:00 மணிக்கு தீபாராதனையும். 11:00 மணிக்கு, உச்சிகால அபிேஷகம், ஆறாட்டு உற்சவமும் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, ஊர் விநாயகர் கோவிலில் இருந்து, திருமண சீர் வரிசைகள் கொண்டுவரப்பட்டு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு, 9:15 மணிக்கு, திருக்கல்யாண கோலத்தில் சுவாமி வீதியுலா, விருந்து, ஊஞ்சல் வசந்தவிழா நடக்கிறது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் இன்று காலை, 10:30 முதல் மதியம், 12:30 மணி வரை, வள்ளி-தெய்வானையுடன் சுப்ரமணியசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு, 7:00 மணிக்கு, வெள்ளி ரதத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட், சக்தி விநாயகர் கோவிலில் உள்ள சுப்ரமணியசுவாமிக்கு, இன்று காலை, 8:00 மணிக்கு அபிேஷகம், அலங்காரமும், 8:30 மணிக்கு, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சனையும், காலை, 10:30 மணிக்கு திருக்கல்யாணமும், மாலை, 6:00 மணிக்கு, சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.