உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவாசப்பெருமாள் கோவிலில் புதிய கொடி மரம் அமைப்பு

சீனிவாசப்பெருமாள் கோவிலில் புதிய கொடி மரம் அமைப்பு

அம்பத்துார்: பழமையான பெருமாள் கோவிலில், தங்க முலாம் பூசப்பட்ட புதிய கொடி மரம் அமைக்கப்பட்டது. சென்னை அம்பத்துாரை அடுத்த முகப்பேர், வெள்ளாளர் தெருவில், 350 ஆண்டுகள் பழமையான சந்தான சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள, கோவிலில் முதல்முறையாக 20 லட்சம் ரூபாய் மதிப்பில், 27 அடி உயர தங்க முலாம் தீட்டிய கொடிமரம் (துவஜஸ்தம்பம்), நேற்று காலை 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் அமைக்கப்பட்டது. முன்னதாக, 16ம் தேதி, வேத பிரபந்த இதிகாச புராண பாராயணம், சாற்று முறை ஆகியவை நடந்தது. 17ம் தேதி, இரண்டாம் கால பூஜையும், நேற்று காலை 6:00 மணி அளவில், மூன்றாம் கால பெருமாள் யாகசாலை பிரவேசம், கும்ப ஆராதனம், ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. தென் திருப்பதி என, அழைக்கப்படும் இந்த கோவிலில் 9.5 அடி உயர பெருமாள் சிலை அமைந்துள்ளது. குழந்தை பாக்கியம் வேண்டுவோர், பவுர்ணமி தினத்தில் சந்தான கோபால பூஜை செய்தால், நிறைவேறும் என்பதும் இந்த கோவிலின் ஐதீகம். முகப்பேர், நொளம்பூர், அம்பத்துார், திருமங்கலம் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் குமரேசன் செய்து இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !