அண்ணாமலைக்கு போக முடியலையா! இதோ... வீட்டுக்கே வருகிறார் அண்ணாமலையார்!
திருவண்ணாமலை தீபத்துக்கு போக வேண்டுமென நினைக்கத்தான் செய்கிறோம்...ஆனால், பெரும் கூட்டத்தில் சென்று வருவதென்பது முடிகிற காரியமாகவா இருக்கிறது...என்ன தான் செய்வது என்பவர்கள், நாவுக்கரசர் பாடிய இந்த பதிகத்தை பாடுங்கள். அண்ணாமலைக்கு செல்பவர்கள் இந்த புத்தகத்தை கையில் எடுத்துச் சென்று தீபம் ஏற்றும் போது பாடுங்கள். கார்த்திகை தீபம் ஒளிர்வது போல், நம் வாழ்க்கையும் ஒளிர அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்பாளும் அருள்புரிவார்கள்.
ஓதிமா மலர்களல் துõவி
உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்தோள்
சுடர்மழுப் படையி னானே
ஆதியே அமரர் கோவே
அணிஅணா மலையு ளானே
நீதியால் நின்னை யல்லால்
நினையுமா நினைவி லேனே.
பண்தனை வென்ற இன்சொற்
பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக்
கடவுளே கமல பாதா
அண்டனே அமரர் கோவே
அணியணா மலையு ளானே
தொண்டனேன் உன்னை யல்லால்
சொல்லுமா சொல்லில் லேனே.
உருவமும் உயிரும் ஆகி
ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
நின்றஎம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாதம் அல்லால்
மற்றொரு மாடு இலேனே.
பைம்பொனே பவளக் குன்றே
பரமனே பால்வெண் ணீறா
செம்பொனே மலர்செய் பாதா
சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும்
அணியணா மலையு ளானே
என்பொனே யுன்னை யல்லால்
ஏதுநான் நினைவி லேனே.
பிறையணி முடியி னானே
பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார்
கொன்றையாய் வாம தேவா
அறைகழல் அமரர் ஏத்தும்
அணிஅணா மலையு ளானே
இறைவனே உன்னை யல்லால்
யாதுநான் நினைவி லேனே.
புரிசடை முடியின் மேலோர்
பொருபுனல் கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக்
கருதிய கால காலா
அரிகுல மலிந்த அண்ணா
மலையுளாய் அலரின் மிக்க
வரிமிகு வண்டு பண்செய்
பாதநான் மறப்பி லேனே.
இரவியும் மதியும் விண்ணும்
இருநிலம் புனலும் காற்றும்
உரகமார் பவனம் எட்டும்
திசையொளி உருவம் ஆனாய்
அரவுமிழ் மணிகொள் சோதி
அணியணா மலையு ளானே
பரவநின் பாதம் அல்லால்
பரமநான் பற்றி லேனே.
பார்த்தனுக்கு அன்று நல்கிப்
பாசுப தத்தை ஈந்தாய்
நீர்த்ததும்பு லாவு கங்கை
நெடுமுடி நிலாவ வைத்தாய்
ஆர்த்துவந்து ஈண்டு கொண்டல்
அணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத்
திறமலால் திறமி லேனே.
பாலுநெய் முதலா மிக்க
பசுவில ஐந்து ஆடுவானே
மாலுநான் முகனும் கூடிக்
காண்கிலா வகையுள் நின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூசும்
அணியணா மலையுளானே
வாலுடை விடை யாய் உன்றன
மலரடி மறப்பி லேனே.
இரக்கம்ஒன்று யாதும் இல்லாக்
காலனைக் கடிந்த எம்மான்
உரத்தினால் வரையை யூக்க
ஒருவிரல் நுதியி னாலே
அரக்கனை நெரித்த அண்ணா
மலையுளாய் அமரர் ஏறே
சிரத்தினால் வணங்கி யேத்தித்
திருவடி மறப்பி லேனே.