ஒளியில் உங்கள் வம்சமே மிதக்கட்டும்!
நிலவால் இரவும், சூரியனால் பகலும் பிரகாசம் அடைகின்றன. நல்லெண்ணத்துடன் ஒருவன் செய்த புண்ணியம் அவனது வம்சத்தையே, கார்த்திகை தீபம் போல் ஒளி பெறச் செய்யும். எனவே, நீங்கள் நல்லதை மட்டுமே செய்யுங்கள். தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும், அதன் சுடர் மேல்நோக்கியே எழும். அதைப் போல, உயர்ந்த குணம் கொண்டவர்கள் எந்த நிலையிலும் கீழாக சிந்திப்பதில்லை. கார்த்திகை தீபம் உணர்த்தும் தத்துவம் இதுவே. போதும் என்ற மனநிறைவும், பெருமிதமும் வந்து விட்டால், மனதிற்குள் மகிழ்ச்சி என்னும் மாட மாளிகையின் கதவு திறந்து விட்டது என்பது பொருள். உண்மை என்னும் தாய், அறிவு என்னும் தந்தை, தர்மம் என்னும் சகோதரர், கருணை என்னும் நண்பன், அமைதி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் ஆகியோர்களே நமக்கு நன்மை செய்யும் நல்ல உறவினர்கள். உழைப்பால் கிடைத்த செல்வம் உத்தமமானது. தந்தை வழியில் பெற்ற செல்வம் மத்திமம். ஆனால், மனைவி வழியில் கிடைத்த செல்வமே அதமம். ஆறுதரம் பூமியை வலம் வருதல், பல்லாயிரம் முறை காசி, சேதுக்கரை போன்ற புண்ணியத் தலங்களில் நீராடல் போன்றவற்றால் பெற்ற புண்ணியத்தை ஒரே ஒரு முறை தாயை வணங்கினாலே உண்டாகும்.
இசை, கவிதை எழுதுதல், தைரியம், தர்ம சிந்தனை ஆகிய நற்பண்புகள் மனிதன் பிறக்கும் போதே உண்டாகுமே தவிர, பிற்காலத்தில் கற்றுக் கொள்பவை அல்ல.பறவைக்கு இரு சிறகுகள் போல பணிவும், பக்தியும் மனிதனுக்கு இருக்க வேண்டிய நற்குணங்கள். இவற்றின் மூலம் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்.பண்பே இல்லாத மனிதர்களுக்கு உதவி செய்வதும், பாம்புக்கு பால் வார்ப்பதும் ஒன்றே. நல்லவர்களுக்குச் செய்யும் உதவி பசுவுக்கு புல் கொடுத்தது போலாகும்.பணியாளர்களிடம் கருணையும், தீயவர்களிடம் துணிவும், குருவிடத்தில் பொறுமையும் காட்டுபவர்களே அறிஞர்கள். இவர்களால் இந்த உலகமே நலம் பெறும்.இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்வதும், செய்த நன்றியை மறவாமல் இருப்பதும் நல்லவர்களின் பண்புகளாகும்.நட்பு உண்டாகாத வரை ஒருவரைக் கண்டால் மரியாதை செய்ய வேண்டும். ஆனால், நட்பு ஏற்பட்ட பின்னும் மரியாதை செய்வது தேவையற்றது.கணவரின் சொல்லுக்கு கட்டுப்படும் மனைவி, பெற்றோரை மகிழ்விக்கும் பிள்ளை, சுகதுக்கத்தில் பங்குபெறும் நண்பன் ஆகிய மூவரும் மேன்மை மிக்கவர்கள். பொறாமை கொண்டவன், வருமானம் இருந்தும் மகிழ்ச்சி இல்லாதவன், எப்போதும் கோபத்தில் துடிப்பவன், சந்தேக புத்தி படைத்தவன், மற்றவரை அண்டிப் பிழைப்பவன் ஆகியோர் துக்கமாகவே வாழ்வு நடத்துவர். (மகான் வாரியார்)