மாரியம்மன் கோவில் உண்டியல் ரூ.9.61 லட்சம் காணிக்கை
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியல்களின் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. இதில், 9 லட்சத்து, 61 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள, முக்கிய கோவில்களில் ஒன்றாக கோட்டை மாரியம்மன் கோவில் கருதப்படுகிறது. கோவிலுக்கு தினமும், 500க்கும் மேற்பட்டோர் வந்து ஸ்வாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் உள்ள காணிக்கை உண்டியல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்பட்டு, அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு கோவில் வளர்ச்சி பணிக்கு பயன்படுத்தப்படும். அதன்படி, நேற்று கோவிலில் உள்ள நான்கு காணிக்கை உண்டியல்கள் எண்ணப்பட்டது. இதில், 9 லட்சத்து, 61 ஆயிரம் ரூபாய் பக்தர்கள் மூலம் காணிக்கையாக வழங்கப்பட்டிருந்தது. இது தவிர, 103 கிராம் தங்கம் மற்றும் 180 கிராம் வெள்ளி ஆகியவையும் உண்டியலில் காணிக்கையாக இருந்தது. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உண்டியல் பணம் எண்ணப்பட்டது. உதவி ஆணையர் வளர்மதி, நாமக்கல் நரசிம்மன் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், கோட்டை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் உமாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.