மழை வெள்ளத்தில் இருந்து மீள காலபைரவருக்கு சிறப்பு யாகம்!
தஞ்சாவூர்: பிரசித்தி பெற்ற காலபைரவர் சேஷத்திரமான கும்பகோணம் அருகேயுள்ள அம்மாச்சத்திரம் ஸ்ரீ ஞானம்பிகை சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலில் பைரவாஷ்டமி எனும் பைரவர் ஜெயந்தியை யொட்டி சென்னை மக்கள் மழை வெள்ளத்தில்இருந்து மீள இன்று ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு யாகம் மற்றும் ருத்ராபிஷேகமும், விசேஷ ஆராதனையும் நடைப்பெற்று பின்னர் இரவு ஸ்ரீ காலபைரவர் சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கவுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அம்மாசத்திரத்தில் பழமையும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ஞானம்பிகை சமேத சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் இத்திருக்கோயில் உள்ள மூலவர் சிவபெருமானை, ஸ்ரீமரிஷி, பிருகு ரிஷி, புலத்தியர் ரிஷி, அத்திர ரிஷி, ஆங்கிரஸ ரிஷி, விசிஸ்ட மகரிஷி, பரத்வஜர் ரஷி ஆகிய ஏழு ரிஷிகள் வழிப்பட்டதால் இத்தல இறைவன் சப்தரிஷீஸ்வரர் என்று போற்றப்படுகிறார் இத்தல இறைவி ஞானாம்பிகை பஞ்ச கன்னிகைகளான மகேஸ்வரி, பிரம்மதி, வைஷ்ணவி, கவுமாரி, இந்திராணி ஆகியோருடன் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தில் காசிக்கு நிகராக சர்வசக்தி நிறைந்த பைரவர் தனிச்சன்னதி கொண்டு அருள் பாலிப்பதால் இத்தலம் பைரவர் சேஷத்திரம் என புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது இவர் சனிக்கு குருவாகவும், தெய்வமாகவும் இருந்து காலத்தை இயக்குவதால் இவர் காலபைரவர் என்றும் போற்றப்படுகிறார் பைரவரது வாகனம் வடக்கு நோக்கி இருப்பதால், இவரை வழிபடுவதன் மூலம் பித்ரு தோஷங்கள் மட்டுமின்றி திருமணத்தடை, புத்திரபாக்கியத்தடை, தொழில் அபிவிருத்தி தடை, சத்ருசம்ஹாரம், செய்வினை கோளாறுகள் முதலியவனவற்றை நீக்கும் பரிகார ஸ்தலமாகவும், சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது.
இத்தகைய பிரசித்தப்பெற்ற தலத்தில் ஆண்டுக்கு ஓர்முறை கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீகாலபைரவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதனை யொட்டி, இன்று ஸ்ரீ காலபைரவருக்கு சிறப்பு யாகமும் அதனை தொடர்ந்து நல்லெண்ணெய், மாப்பொடி, திரவியப்பொடி, மஞ்சள்பொடி, சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்த்தம், தொடர்ந்து விசேஷ கடபிஷேகமும் அதனையடுத்து பல்வகை விசேஷ மலர் மாலைகளால் ஸ்ரீ காலபைரவர் அழகாக அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைப்பெற்றது பின்னர் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தஞ்சை மாவட்டத்தின் உள்ள பல முக்கிய ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சென்னை மக்கள் மழை வெள்ளத்தில்இருந்து மீள ஸ்ரீ காலபைரவருக்கு பூசணிக்காய், தேங்காய், வாழைப்பழம் துணிகளில் கட்டப்பட்ட மிளகு என பல்வேறு பொருட்களில் நல்எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், ஆகியவற்றை கொண்டு தீபம் ஏற்றியும், சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.