உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழையால் பழநியில் ஐயப்ப பக்தர் வருகை குறைந்தது!

மழையால் பழநியில் ஐயப்ப பக்தர் வருகை குறைந்தது!

பழநி: தொடர் மழையால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால் பழநி கிரிவீதி அடிவாரப்பகுதிகளில் ரூ. பலகோடி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பழநி கோயிலுக்கு சபரிமலை சீசன், தைப்பூச திருவிழா, பங்குனி உத்தர திருவிழா வரை சராசரியாக நாள்ஒன்றுக்கு 50 ஆயிரம் பக்தர்களுக்கு குறையால் வருகின்றனர்.  இதனால் பக்கத்து மாவட்டம், வெளிமாநில வியாபாரிகள் வருகின்றனர். இதைப் பயன்படுத்தி பழநியில் ஆண்டு முழுவதும் கடை வைத்துள்ளவர்களில் சிலர், வெளிமாநில வியாபாரிகளுக்கு தங்களது கடைகளை உள்வாடகை மற்றும் குத்தகைக்கு விடுகின்றனர். இதற்கு மூன்று முதல் 5 மாதங்கள் வரை மொத்தமாக ரூ. 2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வசூலிக்கின்றனர். இதேபோல சன்னதிவீதி, வடக்குகிரிவீதி, மேற்குகிரிவீதி வின்ச் ஸ்டேஷன், அடிவாரம் போலீஸ் ஸ்டேஷன், பழநிகோயில் தலைமை அலுவலகம் எதிரே கடைகளின் அருகே தள்ளுவண்டி, தரை கடை, செட் அமைத்து கடைவைக்க தரைவாடகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை வசூலிக்கின்றனர்.

வியாபாரம் பாதிப்பு: தற்போது கார்த்திகைமாதம் சபரிமலை சீசன் துவங்கியுள்ளது. எனவே கிரிவீதிகள், சன்னதிவீதியில் 500க்குமேற்பட்ட கடைகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகள், தரை கடைகள் என நடைபாதைகளில் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் குவிந்துள்ளனர். அதேசமயம் தொடர்மழை காரணமாக சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் வியாபாரம் பாதிக்கப் பட்டுள்ளது. ரூ.பலகோடி மதிப்புள்ள பொருட்கள் முடங்கியுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

வியாபாரிகள் சிலர் கூறுகையில்,""பழநியை பொருத்தமட்டில் கார்த்திகை முதல் பங்குனிவரை தான் சீசன். இதனால் அடிவாரத்தில் கடைபிடிக்க 3 மாதத்திற்கு ரூ.20 லட்சம் வரை வாடகையாக வியாபாரிகள் தருகின்றனர். ஆனால் இவ்வாண்டு ஐயப்ப பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை. வெளியூர் மொத்த வியாபாரிகள் வருகையால் பாதிக்கப்பட்ட உள்ளூர் சிறு வியாபாரிகள், கடைகளை உள்வாடகைக்கு விடுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !