தமிழகத்தில் இயல்பு நிலை திரும்ப வேண்டி சபரிமலையில் ஹோமம்!
தமிழகத்தில் மழை பாதிப்பு விலகி, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி சபரிமலையில் ‘அஷ்ட திரவிய கணபதி’ ஹோமம் நடந்தது. சபரிமலை அருகே உள்ள குட்டூர் வனப்பகுதியில் வாழும் பக்தர்கள், ஐயப்பனுக்கு தேன், தினை மாவு போன்றவற்றை காணிக்கையாக சமர்ப்பித்தனர்.
27 லட்சம் டின் அரவணை 1.75 பாக்கெட் அப்பம் இருப்பு: சபரிமலை:”சபரிமலையில் 27 லட்சம் டின் அரவணை மற்றும் ௧.௭௫ லட்சம் பாக்கெட் அப்பமும் இருப்பு உள்ளது,” என தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார். அவர் கூறியதாவது: பக்தர்களை சுமந்து வரும் டோளி தொழிலாளர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து போலீசின் துணையுடன் அது தடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேவசம்போர்டு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சன்னிதானத்தில் பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் அரிசியை சுத்தம் செய்து எடுக்க ஒரு மணி நேரத்தில் ஒரு டன் அரிசி சுத்தம் செய்யக்கூடிய இயந்திரம் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அறைகளில் தங்குபவர்களுக்கான நிபந்தனைகள் தமிழ், மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னட ஆகிய மொழிகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
மரக்கூட்டம் முதல் சரங்குத்தி வரை உள்ள பாதையில் அமைக்கப்பட்டுள்ள கியூ காம்ப்ளக்சில் அலைபேசி சார்ஜ் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. நிலக்கல்லில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பழனி மற்றும் ராமேஸ்வரத்தில் இதற்கு சமமான மதிப்புள்ள நிலம் வழங்க வேண்டும். தற்போது 27 லட்சம் அரவணையும், ஒன்றே முக்கால் லட்சம் பாக்கெட் அரவணையும் ஸ்டாக் உள்ளது. தொடர்ந்து தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. மண்டலகால பூஜை தொடங்கி 18 நாட்களில் மொத்த வருமானம் 61.57 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 13 கோடி ரூபாய் குறைவாகும். தமிழகத்தில் மழை முடிந்து இயல்பு நிலை திரும்பும் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாகி இந்த குறைவு சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.