மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
திருச்சி: தொடர் மழைக்கு இடையே, வருணன் வழிவிட, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம், நேற்று காலை வெகு விமர்சையாக நடந்தது.
குழந்தைப்பேறு, சுகப்பிரசவத் தலமாக, திருச்சி மலைக்கோட்டை, மட்டுவார் குழலம்மை தாயுமான ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, 2012ல் திருப்பணிகளுக்கான பாலாயம் செய்யப் பட்டன. தாயுமான ஸ்வாமி, மட்டுவார் குழலம்மை விமானங்கள், சாலை கோபுரம், மாணிக்க விநாயகர் சன்னதி, ராஜகோபுரம், கருவறை விமானங்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் முடிந்ததையடுத்து, மாணிக்க விநாயகர், தாயுமான ஸ்வாமி சன்னதி ஆகிய இடங்களில் கடந்த, 2ம் தேதி இரவு, 7.30 மணிக்கு முதல்கால யாக பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை, 4 மணிக்கு, எட்டாம் கால யாக பூஜையும், ஜபம், விஷேத்ராவ்ய ஹோமமும், காலை, 6 மணிக்கு பரிவார பூர்ணாஹூதியும், காலை, 6.30 மணிக்கு தத்வார்ச்சனை நடந்தது. யாகசாலை பூஜையை அடுத்து, காலை, 7.30 மணிக்கு சிவாச்சாரியார்கள், தாயுமான ஸ்வாமி கோவிலில் சாலை கோபுரம், தங்க விமானத்துக்கு கடங்களை எடுத்து வந்தனர். காலை, 8 மணிக்கு கஞ்சனூர் சிவஸ்ரீ நீலகண்ட குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் தலைமையில் பூஜை நடந்தது. விமானங்கள், கோபுரங்கள் மீது, இரு கருடன்கள் வலம் வந்தன. பக்தர்கள் பரசவத்துடன் தரிசனம் செய்தனர். காலை, 9 மணிக்கு உச்சிப்பிள்ளையார் விமானம், தாயுமான ஸ்வாமி சாலை கோபுரம், மாணிக்க விநாயகர் சன்னதி ராஜகோபுரத்தின் மீது பச்சை கொடி அசைக்க, ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மட்டுவார் குழலம்மை, தாயுமான ஸ்வாமி, உச்சிப்பிள்ளøயார் மற்றும் மாணிக்க விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை, அபிஷேகம், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடந்தது.