திருக்காமீஸ்வரர் கோவில் திருப்பணி தொடர் மழையால் முடக்கம்
வில்லியனுார்: தொடர்மழையால் திருக்காமீஸ்வரர் கோவில் திருப்பணி ஸ்தம்பித்துள்ளது. வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில், 11ம் நுாற்றாண்டில் தர்மபால சோழனால் கட்டப்பட்டது. பழமைவாய்ந்த இக்கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் செய்ய அரசு முடிவு செய்தது.கோவில் திருப்பணிக்கு ரூ. 11.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 2012ம் ஆண்டு டிசம்பரில் பணிகள் துவங்கியது. பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான தொழில்நுட்பக் குழுவினர் மேற்பார்வையில் திருப்பணி நடந்து வருகிறது. ரூ. 29.50 லட்சம் செலவில் கோவின் முன் மண்டபம், கோவில் உள் பிரகாரத்தில் ரூ.55 லட்சம் செலவில், 20 ஆயிரம் சதுர அடிக்கு, கருங்கல் தரை அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு பகுதியில், 99 அடி உயரம் கொண்ட ஏழு நிலை ராஜகோபுரத்தில், ரூ.48 லட்சம் செலவில் பழுதடைந்த சிலைகளை சீரமைத்து நான்கு நிலைகளில் மட்டுமே வண்ணம் பூசப்பட்டுள்ளது. கிழக்கு பதியில் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்தில் இரண்டு நிலைகள் மட்டும் சரி செய்து வண்ணம் பூசும் பணி நடந்தது.ஜன., 20ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க திட்டமிட்டுள்ள நிலையில், தொடர் மழையால் திருப்பணி முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.