திருவண்ணாமலை மஹா தீப கொப்பரை மலையில் இருந்து இறக்கம்!
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திற்காக மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்ட மஹா தீப கொப்பரை, மலையிலிருந்து நேற்று காலை இறக்கப்பட்டது. பக்தர்கள் வழிபாட்டிற்காக, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா, கடந்த மாதம், 16ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10 நாள் விழா நடந்தது. கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஹா தீபம், கடந்த, 25ம் தேதி, 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இந்த மஹா தீபம், தொடர்ந்து, 11 நாட்கள் எரிந்து, கடந்த, 5ம் தேதி இரவுடன் நிறைவுற்றது. மஹா தீபம் நிறைவு பெற்ற மறுநாள் காலையில், தீப கொப்பரை மலையில் இருந்து இறக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்படும். ஆனால், தொடர்மழை பெய்வதால், மஹா தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து இறக்கப்படவில்லை. மலையில் பாறைகள் வழுக்கும் என்பதால்,கொப்பரையை கீழே இறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று காலை மலை உச்சியிலிருந்து கொப்பரை கீழே இறக்கப்பட்டு, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு கொப்பரை வைக்கப்பட்டுள்ளது.