தேவைக்கு அதிகமானதை பிறருக்கு செலவழியுங்கள்!
ஒருமுறை, நபிகள் நாயகம், நீ தேவைக்கு அதிகமான உனது செல்வத்தை ஏழ்மையில் வாடும் இறையடியார்களுக்காகவும், மார்க்கப் பணிகளுக்காகவும் செலவிடு; அதுவேஉனக்கு நன்மை தரும். தேவைக்கு அதிகமான செல்வத்தை தேவையுடையவர்களுக்காக நீ செலவிடாவிட்டால் இறுதியில் அது உனக்கு தீங்கு பயக்கும்.உன்னிடம் தேவைக்கு அதிகமாகச் செல்வம் இல்லை; உன் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்கு மட்டுமே செல்வம் இருக்கின்றது என்றால், அதிலிருந்து நீ சலவிடாவிட்டால் அதற்காக அல்லாஹ் உன்னைக் கண்டிக்க மாட்டான். நீ எவருக்குப் பொறுப்பாளியாய் இருக்கின்றாயோ அவர்களிலிருந்து தர்மம் செய்யத் தொடங்கு! என்றார்.மேலும், வல்ல அல்லாஹ் கூறுகின்றான்: நீ தேவையுள்ள என்னுடைய அடியார்களுக்காகவும், மார்க்கப் பணியை வளர்ச்சி பெறச்செய்வதற்காகவும் செலவிட்டால், நான்உனக்காகச் செலவு செய்வேன், என்றும் அவர் சொன்னார்.இதற்கான விளக்கத்தைக் கேளுங்கள்.
மனிதன் தன் சம்பாத்தியத்திலிருந்து பிறமக்களின் தேவைகளுக்காகவும், மார்க்கப் பணிகளுக்காகவும் செலவிடுகின்ற செல்வம்எதுவாயினும் அது வீணாகி விடுவது இல்லை. மாறாக, அவன் அதற்கான கூலியை மறுஉலகத்திலும், இவ்வுலகிலும் பெற்றுக் கொள்ளலாம். உலகில் அவனது செல்வத்தில்செழிப்பும், வளமும் உண்டாகும். மறுமையில் அவன் கூலியாகப் பெறுவது எதுவாயினும் அது அளவற்றதாக அமையும். அதன் மதிப்பை இவ்வுலகில் அளவிட இயலாது.ஒருமுறை அபூதர் (ரலி) என்பவர், நபிகள் நாயகத்திடம் சென்றார். அண்ணலாரின் பார்வை அவர் மீது பட்டபோது, அவர்கள் அழிந்து போய் விட்டார்கள்! என்று கூறினார். யார் அழிந்து போய் விட்டார்கள்? என்று அபூதர் (ரலி) கேட்கவே, அதற்கு அண்ணலார், செல்வந்தர்களாய் இருந்தும் செலவழிக்காமல் இருப்பவர்கள் அழிந்துபோய் விட்டார்கள், என்றார்.மேலும், முன்னால் இருப்பவர்களுக்கும், பின்னால் இருப்பவர்களுக்கும், வலதுபக்கம் இருப்பவர்களுக்கும், அனைவருக்கும் செல்வத்தை அள்ளித் தருபவர்கள் வெற்றியடைந்தவர்கள் ஆவர். ஆனால், இப்படிச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர், என்று தேவைக்கு அதிகமாக இருப்பதை பிறருக்கு அளிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை எடுத்துச் சொன்னார்.