சபரிமலையின் நுழைவு வாயில் பம்பையை அழகுபடுத்த முடிவு
சபரிமலை: சபரிமலையில் நுழைவு வாயிலான பம்பையை அழகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபரிமலை உயர்மட்ட கமிட்டி தலைவரும், கேரள அரசு முன்னாள் தலைமை செயலாளருமான ஜெயக்குமார் கூறினார். சபரிமலை சன்னிதானத்தில் உள்ள கழிவுநீரை சுத்தப்படுத்தி காட்டில் விடுவதற்கு 22 கோடி ரூபாய் செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் நிறுவப்பட்டது. கடந்த அக்டோபரில் இது அவசரம் அவசரமாக திறக்கப்பட்டது. ஆனால் அதன் செயல்பாடு முழுமை அடையாததால் பல இடங்களிலும் கழிவறை தண்ணீர் உடைந்து வெளியேற தொடங்கியது. மேலும் இந்த நிலையத்தில் கழிவுநீரில் இருந்து பாக்டீரியா உருவாகாததால் அந்த தண்ணீர் அப்படியே காட்டில் போகும் நிலை ஏற்பட்டது. இது பற்றி கேரள ஐகோர்ட் நியமித்த தனிஆணையர் பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் சபரிமலை உயர்மட்ட கமிட்டி தலைவர் ஜெயக்குமார் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள சில பிரச்னைகள் ஓரிரு நாளில் சரி செய்யப்பட்டு விடும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கு ஆரம்ப நிலையில் ஏற்படக்கூடிய சில பிரச்னைகள் இருக்கிறது. கழிவு நீர் வரும் பாயின்டுகள், செப்டிக் டேங்க் கசிவு போன்றவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது பற்றி 12-ம் தேதி திருவனந்தபுரத்தில் கூடும் உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்படும்.சபரிமலையின் நுழைவு வாயில் என்ற முறையில் பம்பை அழகு படுத்தப்படும். சன்னிதானத்தில் விருந்தினர் மாளிகை முன்புறம் பக்தர்கள் தங்குவதற்கான வசதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.