அம்மன் கூழ்.... மகிமை தெரியுமா?
கேழ்வரகு மிகுந்த சத்துள்ள தானியம். கம்பு குளிர்ச்சியைத் தரக்கூடியது. சத்தையும் குளிர்ச்சியையும் தரக்கூடிய இவற்றில்தான் கூழ் காய்ச்சி ஊற்றியிருக்கிறார்கள். பஞ்சத்தைப் போக்குவதோடு, வெப்பம் மற்றும் வறட்சி ஆகிய இரண்டையும் தாக்குப்பிடிக்க உதவியிருக்கிறார்கள். கூழுக்குக் கடித்துக்கொள்ள கொடுக்கும் சின்ன வெங்காயமும் மருத்துவ பலன்கள் அதிகம் கொண்டது. அதேபோல், கஞ்சியில் சேர்க்கும் பாசிப்பயறு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயம், தேங்காய்த்துருவல், மல்லித்தழை, கறிவேப்பிலை, மாங்காய் என எல்லாமும் மருத்துவ குணங்களைக் கொண்ட பொருட்கள்தான். இப்படிச் சத்தான, நோய்களைத் தீர்க்கும் பொருட்களைக் கொண்ட உணவுதான் கூழும் கஞ்சியும். எவ்வளவு பெரிய மருத்துவ அறிவோடு இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!
அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகு, குன்னி வேர், உமிஞ்சை வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவற்றை அரைகுறையாகத் தட்டியெடுத்து ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அரிசியைக் கஞ்சியாக வேக வைத்து துணியில் கட்டிய மருந்தை அதில் 15 நிமிடம் போட்டுவிடவேண்டும். பின்னர் இதைக் குடிக்கலாம். உடலுக்கு நல்லது. ஆடி மாதத்துக் குளிரிலும் காற்றிலும் வர வாய்ப்புள்ள நோய்களான இருமல், தொற்று நோய் ஆகியவை வராது.