சபரிமலையில் விடாது துரத்தும் மழை: பம்பையில் வெளப்பெருக்கு!
சபரிமலை: சபரிமலையில் மழை தினசரி அஜன்டாவாக மாறி வருகிறது. காலையில் மழை மேகம், பத்து மணிக்கு பின்னர் வெயில், மாலை மூன்று மணிக்கு பின்னர் மழை மேகம், ஐந்து மணி முதல் இரவு வரை மழை இதுதான் சபரிமலையில் நடப்பு மண்டல சீசனில் கால நிலை. ஓரிரு நாட்களை தவிர்த்தால் எல்லா நாட்களிலும் மழை பெய்துள்ளது. மாலையிலும், இரவிலும் பெய்யும் மழை பக்தர்களை மிகவும் சிரமப்படுத்துகிறது. பக்தர்கள் இலவசமாக தங்குவதற்கு நான்கு ஷெட்டுகள் உள்ளது. இதில் அதிக பட்சமாக நான்காயிரம் பேர் தங்கலாம். மீதமுள்ளவர்கள் படும் பாடு வேதனையானது. கட்டிடங்களின் ஓரங்களில் இரவு முழுவதும் நின்று கொண்டிருக்க வேண்டும். அடுத்த நாள் அதிகாலை மூன்று மணிக்கு நடை திறந்த பின்னர் அபிஷேகம் முடித்துதான் ஊருக்கு திரும்ப முடியும். நேற்று மாலை ஐந்து மணி வாக்கில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் பக்தர்கள் தங்கும் ஷெட்டுகளிலும் தண்ணீர் புகுந்தது. தங்குவதற்கு கூடுதல் ஷெட்டுகள் அமைக்க வேண்டும் என்பதுதான் சபரிமலையில் தற்போதைய முக்கிய தேவையாக உள்ளது.
பம்பையில் மீண்டும் வெளப்பெருக்கு: சபரிமலையில் நேற்று மாலை பெய்த கன மழையால் பம்பை நதியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நடப்பு மண்டல சீசனின் தொடக்கத்தில் இதுபோன்ற பெருமழையால் பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருவேணியில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கார்கள் தண்ணீரில் மூழ்கியது. இதில் 30-க்கும் மேற்பட்ட கார்கள் முழுமையாக பழுதடைந்தது. அதன் பின்னர் திருவேணியில் பார்க்கிங் தடை செய்யப்பட்டிருந்தது. மழை சற்று குறைந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு பார்க்கிங் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை ஐந்து மணி முதல் கன மழை பெய்து பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சன்னிதானம் மற்றும் பம்பையில் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு வாகனங்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டது. எனினும் சில டிரைவர்கள் வராததால் கார்கள் தண்ணீரில் மூழ்கியது.