உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் அவசர காலத்தை எதிர்கொள்ள திட்டம் தயாராகிறது

சபரிமலையில் அவசர காலத்தை எதிர்கொள்ள திட்டம் தயாராகிறது

சபரிமலை: சபரிமலையில் அவசர கால நிலை ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி திட்டம் தயாரிக்கப்படுகிறது. மாநில அரசின் பரிந்துரையின் பேரில் நிலம் மற்றும் பேரழிவு மேலாண்மை நிறுவனம் இதற்கான திட்டத்தை தயாரித்து வருகிறது. இதன் துணை பேராசிரியர் பைசல் டி இலியாஸ் தலைமையில் வல்லுநர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான மாதிரி திட்டம் வடிவமைக்கப்பட்டு சன்னிதானத்தில் போலீஸ் தனி அதிகாரி அலுவலத்தில் விவாதம் நடைபெற்றது. சன்னிதானம், பம்பை மற்றும் பக்தர்கள் வரும் பாதைகளில் அசம்பாவிதங்கள், விபத்துகள் ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது, பக்தர்களை அப்புறப்படுத்த வேண்டி வந்தால் அதை எப்படி மேற்கொள்வது, மகரவிளக்கு நாளில் சன்னிதானத்தில் கூட்டத்தை எப்படி ஒழுங்கு படுத்துவது? போன்ற விஷயங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இதில் கேரள போலீஸ் அதிகாரிகளுடன் மத்திய அதிவிரைவு படை கமாண்டர்கள், தேசிய பேரழிவு நிவாரணப்படையின் கமாண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த விஷயங்களில் அனைத்து அரசு துறைகளின் கருத்து கேட்ட பின்னர் இறுதி திட்டம் தயாரிக்கப்படும். அவசர காலங்களில் தப்ப வேண்டிய வழிகளை அடையாளப்படுத்தி போர்டு வைப்பது, மகர ஜோதி தரிசனத்துக்கு பின்னர் பாண்டித்தாவளத்தில் இருந்து திரண்டு இறங்கி வருவதை பல கட்டங்களாக பிரிப்பது போன்ற ஆலோசனைகளும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !