உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர், அவிநாசி கோவில்களில் தனுர் மாத பூஜை

திருப்பூர், அவிநாசி கோவில்களில் தனுர் மாத பூஜை

திருப்பூர் : திருப்பூர், அவிநாசி, பல்லடம் வட்டாரத்தில் உள்ள கோவில்களில், தனுர் மாத சிறப்பு பூஜை, பஜனை நேற்று துவங்கியது. தனுர் மாதம் எனப்படும் மார்கழி, தேவர்களுக்கும், பக்தர்களுக்கும் உகந்த மாதம். வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என, பல்வேறு விசேஷங்கள் நடைபெறும் மாதம். இம்மாதத்தில், அதிகாலையில் கோவில்கள் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். கிராமங்களில், வீட்டுவாசலில் பெண்கள் மாக்கோலமிட்டு, பூசணிப்பூ உள்ளிட்டவற்றால் அலங்கரிப்பர். வீதிகளில் பஜனை குழுவினர், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, இறைவனை போற்றுவர். விநாயகர் கோவில்களில், நீரால் அபிஷேகம் செய்து, பெண்கள் பலரும் வழிபட்டு வருவர்.

திருப்பூர் பகுதி கோவில்களில், சிறப்பு பூஜை நேற்று துவங்கியது. ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிவில், நேற்று அதிகாலை, 3:30க்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடப்பட்டது. இதேபோல், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிவில், ஆண்டாள் அருளிய திருப்பாவை மற்றும் திருப்பள்ளி எழுச்சி பாடப்பட்டது. ராயபுரம் ஸ்ரீபூமி நீளா தேவி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி கோவிவில், நேற்று அதிகாலை, 4:00க்கு நடை திறக்கப்பட்டு, தனுர் மாத பூஜை துவங்கியது. கோவில் வளாகத்தில், மாக்கோலமிட்டு, பூக்கள் வைக்கப்பட்டன. அருள்நெறி வார வழிபாட்டு மன்றம் சார்பில், அதிகாலை, 5:30க்கு, குலாலர் விநாயகர் கோவிலில், திருப்பள்ளி எழுச்சி நடந்தது. தொடர்ந்து திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு, வீதிகள் வழியாக பஜனை ஊர்வலம் நடந்தது. நல்லூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா நேற்று, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை உற்சவத்துடன் துவங்கியது. விநாயகர் கோவில்களில், பெண்கள், குழந்தைகள், அரசு மரத்தடி விநாயகருக்கு நீரூற்றி வழிபட்டனர். இம்மாதம் முழுவதும், இத்தகைய வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும்.

சிவனடியார் வீதி உலா: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், மார்கழி மாத வழிபாடு நேற்று துவங்கியது. அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கோமாதா பூஜை வழிபாடு நடைபெற்றது. அனைத்து சன்னதி களிலும் உள்ள மூலவ மூர்த்தி களுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.கோவில் பூஜை குழு சிவனடியார்கள் மற்றும் ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் அறக்கட்டளை உறுப்பினர்கள், நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக சென்று, திருவெம்பாவை, திருப்பாவை, தேவாரம் பாராயணம் செய்தனர். அதன்பின், கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.பல்லடம் கோளறுபதி நவகிரக கோட்டையில், விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, சிவபெருமானுக்கு, 16 வகை அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. மடாலய ஊழியர்கள், பக்தர்கள் மற்றும் மாணவர்கள், திரும்வெம்பாவை பாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !