கிறிஸ்துமஸ் சிந்தனை: ஆதரவற்றவர்களுக்கு வாழ்வளிப்போம்
வாஷிங்டன் கார்வர் என்பவர் ஒரு நீக்ரோ தம்பதியின் மகன். அப்போது, நீக்ரோக்களை வெள்ளையர்கள் அடிமைப்படுத்தி இருந்தனர். ஒருமுறை, கார்வரின் பெற்றோரை குழந்தையுடன் கைது செய்தனர். ஒரு குதிரையில் அவர்களை ஏற்றிச் செல்லும் போது, குழந்தை தவறி விழுந்து விட்டது. ஆனால், வெள்ளைக்காரர்கள் அதை கண்டு கொள்ளாமல் அவர்களை இழுத்துச் சென்று விட்டனர். குழந்தை தெருவோரம் அழுதுகொண்டே கிடந்தது. தேவனிடம் பக்தியுள்ள ஒருவர் குழந்தையை தத்தெடுத்து படிக்க வைத்தார். தாவர ஆராய்ச்சியில் கார்வர் சிறந்தவராக திகழ்ந்தார். ஆனால், அவர் ஒரு நீக்ரோ என்பதால் அவர் கண்டுபிடிப்புகள் புறக்கணிக்கப்பட்டன. அந்த சமயத்தில் அமெரிக்காவில் பருத்தி தோட்டங்களை பூச்சிகள் பாழ்படுத்தி பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அந்த சமயத்தில் கார்வரின் கையில் ஒரு பட்டாணிக்கடலை சிக்கியது. அதைக்கொண்டு 15 விதமான பொருட்களை உற்பத்தி செய்யும் முறைகளைக் கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்பைக் கண்டு உலக விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்தனர். கார்வரின் புகழ் உலகெங்கும் பரவியது.“அவர்(ஆண்டவர்) சிறியவனை புழுதியில்இருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவர்களை பிரபுக்களோடு உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தை சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்”என்கிறது பைபிள். அனாதைகளை பாதுகாத்து உயர்த்த வேண்டும் என்பதை இன்றைய சிந்தனையாகக் கொள்வோம்.